சொல்லதிகாரம் - இடையியல்21

அசைத்தல்   -  சார்த்துதல்.   பொருளுணர்த்தாது   பெயரொடும்
வினையொடும்     சார்த்திச்    சொல்லப்பட்டு    நிற்றலின்,   அசை
நிலையாயிற்று,   அவை  ‘அந்தில்’  முதலாயின.  புகழ்ந்திகுமல் லரோ
பெரிதே,  ‘உரைத்திசினோரே’ எனச் சார்ந்த மொழியை  1 வேறுபடுத்தி
நிற்றலின் அசை நிலைச் சொல்லாயின என்பாரும் உளர்.

செய்யுட்கண் இசை நிறைத்து நிற்றலின் இசை நிறையாயின.

குறிப்புச்  சொல்லுவான்    கண்ணதாயினும்    அவன்   குறித்த
பொருளைத்  தாங்குறித்து  நிற்றலின்  ‘தத்தங்  குறிப்பின்’    என்றார்.
சொல்லுவான்   குறித்த   பொருளைத்   தாம்   விளக்கும்   எனவே,
‘கூரியதோர்  வாள்’என  மன்னானன்றி  ஓசை  வேறு  பாட்டான் ஒரு
காற்றிட்பம்   இன்று   என்னும்    தொடக்கத்து   ஒழியிசைப்பொருள்
தோன்றலும்  பெறப்படும்.   பொருட்கும்  பொருளைப் புலனாகவுடைய
உணர்விற்கும் ஒற்றுமை கருதி பொருளுணர்வைப்  ‘பொருள்’ என்றார்.
‘மிகுதி செய்யும் பொருள்’ (உரியியல் 3) என்பது  முதலாயினவற்றிற்கும்
ஈதொக்கும்.

ஒக்கும்  என்னும்  சொல்லன்றே  ஒப்புமையுணர்த்துவது; அச்சொல்
ஆண்டின்மையான்   ஒப்புமை  தோன்றாமையான்  ‘ஒப்பில் வழியால்’
என்றார்.  உவமையோடு  பொருட்கு ஒப்பில்லையென்றாரல்லர் என்பது.
ஒக்கும்  என்னும்  சொல்லை ஒப்பு என்றார் என்பாரும் உளர். ஒப்பில்
வழியாற்  பொருள்   செய்குநவாவன;  அன்ன,  ஏய்ப்ப,  உறழ, ஒப்ப
என்பன  முதலாகப்  பொருளதிகாரத்துள் (பொருள தி. 346) கூறப்பட்ட
முப்பத்தாறனுள் ‘ஒக்கும்’ என்பது ஒழிய ஏனையவாம்.

சாரியையும்     வேற்றுமையுருபும்    உவமவுருபம்     குறிப்பாற்
பொருளுணர்த்துமாயினும்,       புணர்ச்சிக்கண்     உபகாரப்படுதலும்
வேற்றுமைத்   தொகைக்கும்  உவமத்  தொகைக்கும்  அவ்வுருபு பற்றி
இலக்கணங்   கூறுதலும்  முதலாகிய  பயன்  நோக்கி  இவற்றை வேறு
கூறினார்.


1. வேறுடுத்தி   நிற்றலின்  -  அசைத்து  நிற்றலின்   (அசைத்தல்
- சார்த்துதல், வேறு படுத்தல்)