உண்டனம், உண்டாம், உண்ணா நின்றனம், உண்கின்றனம் உண்பம், உண்குவம் என்புழி இறந்த காலம் குறித்த டகரமும், நிகழ் காலம் குறித்த நின்று கின்று என்பனவும், எதிர்காலம் குறித்த பு.கு என்பனவும், ஆம் ஆம் எனப் பால் காட்டுவனவும், இவ்வாறு வருவன பிறவும் ஆம். ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுநவும்’ என்பது அவ்வேற்றுமைப் பொருளிடத்து உருபாகி நிற்கும் சொற்களும் என்றவாறு. அவையாவன; ஐ, ஓடு, கு முதலிய, இவையும் இடைச்சொல் எனக்குறி பெற்றன. ‘அசை நிலைக் கிளவியாகி வருநவும்’ என்பது பொருள்பட நில்லாது அசை நிலையாகி நிற்பனவும் என்றவாறு. ‘இசை நிறைக் கிளவியாகி வருநவும்’ என்பது அசை நிலைக் கிளவி போலப் பிரிந்து நில்லாது ஒரு சொல்லோடு ஒற்றுமைப்பட்டு இசை நிறைந்தற் பொருட்டாகி நிற்பனவும் என்ற வாறு. ‘தத்தங்குறிப்பிற் பொருள்செய் குநவும்’ என்பது தத்தம் குறிப்பினாற் பொருள் உணர்த்து வனவும் என்றவாறு. ‘ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும்’ என்பது குறிப்பினால் வருதலின்றிப் பொருத்தம் இல்லா தவிடத்துப் பொருள் உணர்த்து வனவும் என்றவாறு. ‘அப்பண்பினவே நுவலுங் காலை’ என்பது அவ்வியல்பினையுடைய சொல்லுங் காலத்து என்றவாறு. ‘தத்தங்குறிப்பின்’ என்பதற்குச் ‘சார்ந்த சொல்லின் குறிப்பினால்’ எனவும், ‘ஒப்பில் வழி, என்பதனை ‘ஒரு சொல்லோடு பொருத்தமின்றித் தனி வந்துழி’ எனவும் பொருள் உரைப்பினும் அமையும். அஃதற்றாக, ‘ஒப்பில் வழி’ என்பதற்கு ‘ஒக்கும்’ என்னும் சொல்வாராத உவமவுருபு எனப் பொருள் உரைப்பவால் எனின், ‘ஒப்பினானும் பண்பினானும்’ என்று - அப்பாற் காலம் குறிப்பொடு தோன்றும் (வினை 16) என்றமையானும், போல, அன்ன, ஏய்ப்ப, உறழ என்பன ‘சாத்தன் புலி போலும்’ எனவும் ‘புலி போலப் பாய்ந்தான்’ எனவும், புலி போன்ற சாத்தன்’ ‘புலி போலும் சாத்தன்’ எனவும் இவ்வாறு பிறவும் முற்றும், வினையெச்சமும், பெயரெச்சமுமாகி வருதலினாலும் அவையெல்லாம் வினைக்குறிப்பென்று கொள்க. |