மொழி மரபு

3.எழுத்துக்கள் தொடர்ந்து மொழியாதல்

குற்றெழுத்தின் இயல்பு

44குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே.

இஃது, குற்றெழுத்துக்கள் ஓரெழுத்தொருமொழி ஆகாவென்பதும் அவற்றுள் ஒரு மொழியாவன உளவென்பதும் உணர்த்துதல் நுதலிற்று.

குற்றெழுத்து ஐந்தும் - குற்றெழுத்தாகிய ஐந்தும், மொழி நிறைபு இல- ஓரெழுத்தாய் நின்று ஒரு மொழியாய் நிறைதல் இல.

அவற்றுட் சில நிறைக்கும்.

ஒகரம் ஒழிந்த நான்கும் சுட்டாயும் வினாவாயும் மொழிநிறைக்குமன்றோ வெனின், அவை இடைச்சொல்லாதலின், அவற்றிற்குக் கருவி செய்யார் என்க. இதுவும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது , ஐந்தும் என்பதன் உம்மை1 ஈண்டு எச்சப்பட நின்றது.

எ - டு: து, நொ என வரும்.

(11)

1. முற்றுப்பொருள்பட நின்ற உம்மை எச்சப்பொருள்பட நின்றது.