மரபியல்

6351நிலம்தீ நீர்வளி விசும்பொ டைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லொடு தழா அல் வேண்டும்.

என்-னின். இதுவுமோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.

உலகு நிலமுதலாகிய ஐம்பெரும்பூதங் கலந்த மயக்கமாதலான் மேற்சொல்லப்பட்ட பொருள்களைத் திணையும் பாலும் வழாமல் திரிபுபடாத சொல்லோடே தழுவுதல்வேண்டும் என்றவாறு.

கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல்.

மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கியொன்றாதல் போறல்.

உலகமென்றது உலகினையும் உலகினுட் பொருளையும், உலகமாவது முத்தும் மணியுங் கலந்தாற்போல நிலம் நீர் தீ வளி ஆகாயம் என விரவிநிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி யொன்றானாற்போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ்விரண்டினையும் உலகம் உடைத்தாகலிற் கலந்த மயக்கமென்றார்.

இப்பொருள் எல்லா வுலகத்தையும் விட்டுநீங்காமையின் இவற்றை ஒருமுகத்தான் நோக்க வேறுபாடில்லா மாதலான் மேற்கூறிப்போந்த முறையினான் வேறுபடுத்து இருதிணையாகவும் ஐம்பாலாகவும் இயன்ற நெறி வழுவாமைத் திரிபுபடாத சொல்லோடே புணர்க்க என்றவாறாம்.


உதாரணம்

சாத்தன் சோற்றை உண்டான் என்பது. இது உண்டற் குரியானெனக் கூறுதலின் மரபாயிற்று. அஃதேல் வழாமை தழால்வேண்டுமெனக் கருதியபொருள் முடியும்; திரிவில்சொல் என்றது மிகையெனின். ஒக்கும் குழவி என்பது உயர்திணைக்கண்வரின் அதற்குரிய பாலாற் கூறாது அஃறிணைக்குரிய பாலாற் கூறப்படுதலின் அவ்வகை யான் வருவன வழுவாயினும் திரிவில்சொல் என்றதனான் இதுவும் அடக்கிக்கூறினார்.

(91)

1. நிலம், நீர், தீ, வளி ஆகாயம் என ஒன்று ஒன்றனுள் அடங்கும் முறையால் கூறுதல் செய்யாது மயங்கக் கூறியது என்னையெனின், அவை கலக்குங்கால் ஒரோ பொருளின் கண்ணும் அம்முறையானே நிற்கும் கொல் என்று கருதினும் கருதற்க, மயங்கி நிற்கும் என்றற்கு அவ்வாறு கூறினான் என்பது (தொல், பொருள், 644. பேரா.)