86நூன்மரபு

பொருள்:உயிர்மெய்யெழுத்துள்  உயிரெழுத்துத்   தோன்றும்  நிலை,
உறுப்புற்று அமைந்து உருவாகி நிற்கும் அவ்வம்மெய்களின்  இடத்ததாகும்.
உயிர் என்றது சாதி ஒருமை.
 

அஃதாவது உயிர்ப்பதற்கு  முற்படும் மெய்யானது  வாய் உறுப்புக்களுள்
எவ்விடத்து உருவாகி நிற்கின்றதோ அவ்விடத்தினின்று  அம்மெய்யின் வழி இவ்வுயிர்கள் தோன்றுமென்பதாம்.
 

இதனான் தன்னிலைதிரியா மிடற்றுப் பிறந்திசைக்கும் உயிர்களின் நிலை வேறு.   மெய்யொடு   கூடியிசைக்கும்   உயிர்களின்   நிலை   வேறென உணர்த்தப்பட்டது. உயிர்ப்பது  உயிரிசையாயினும் தனது  ஒலியைக் காட்டி பொருள்வேறுபாடு  செய்வது  மெய்யேயாதலின்  மெய்க்கு  முதன்மைதந்து கூறினார்.
 

எ - டு :தமியை - என்புழித் தகரமெய்  அண்ணம் நண்ணிய பல்முதல்
மருங்கின்  மெய்யுற்று  நிற்கும்,  அதற்குத்  துணையாகி  வந்த  அகரமும்
அவ்விடத்தே பொருந்தி நெஞ்சுவளியாற் பிறக்கும். மகரமெய்  இதழியைந்து நிற்கும்,   அதற்குத்  துணைவந்த  இகர  உயிர்  இதழினிடமாகப்பொருந்தி மகரத்தின் உருவைச்சிறிது திரித்து மூக்குவளி இசையாற் பிறக்கும். யகரமெய் அண்ணத்தை  அடிநாக்  கண்ணுற  நிற்கும். அதற்குத் துணைவந்த  ஐகார உயிர்  அவ்விடத்தே  பொருந்தி  யகர உருவைச்சிறிது திரித்து மிடற்றெழு வளியிசையாற் பிறக்கும்.  இவ்வாறாதலை  அவ்வவ்வெழுத்துக்களை  ஒற்றி உயிர்த்துச்  செவியாற்  கேட்டறிக.  ஏனையவும்  இவ்வாறே   பிறத்தலின் ‘‘மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே’’ என்றார்.
 

இதனான் மெய்யெழுத்து ஒலித்துநிற்கும் நிலையில்  புள்ளியாகிய அரை மாத்திரையை   இழக்கும்  காரணமும்,  உயிர்மெய்யின்  மாத்திரை  உயிர் அளவாயே நிற்கும் காரணமும் விளங்கும்.
 

இந்நூற்பாவை    உரையாளர்  உயிர்மெய்  எழுத்துள்  உயிர்  நிற்கும்
இடம்பற்றி  விதிப்பதாகக்கொண்டு  உரைவரைந்தனர்.  அது  புள்ளியில்லா என்னும்  சூத்திரத்தானும்  ‘‘உயிர்மெய்  யீறும்  உயிரீற் றியற்றே’’ என்னும் நூற்பாவானும் பெறப்படுதலின்  மிகைப்படக்  கூறலாய் முடியும்.  அன்றியும்
உயிர்மெய்க்கண்  மெய்    தனது   மாத்திரையை     இழத்தற்கு    விதி பெறப்படாதொழியும். மேலும் உயிரினது பிறிதொருநிலையாகிய இந்நிலையும் புலப்படாதே ஒழியும் என்க.
 

சூ. 19:

வல்லெழுத் தென்ப கசட தபற 

(19)
 

க-து:

மெய்யெழுத்துப்  பதினெட்டனுள்  ஒருசாரனவற்றை  இனமாக்கி
அவற்றிற்கு இலக்கணக்குறியீடு கூறுகின்றது.