நூன்மரபு87

பொருள்: மெய் பதினெட்டனுள்  கசடதபற  என்னும்  இவ்ஆறனையும்
வல்லெழுத்து எனக்கூறுவர் புலவர்.
 

‘‘கசடதபற’’ என்னும் இவை சாரியை  ஊர்ந்து  நிற்கும்  மெய்யெழுத்து
என அறிக. (வல்-வலிமை,  திண்மை)  இவ்ஆறனையும்  பிறப்பிக்குமிடத்து
வாயுறுப்புக்கள்  நன்கு  ஊன்றி   நிற்க,   அவற்றை    நெஞ்சுவளியானது
மிகவலிந்து   வெளிப்படுக்கும்.   அதனான்  அவ்வளியினது   வன்மையை
எழுத்தின் மேலேற்றிக் கூறுதல் மரபு என்பது  தோன்ற  ‘‘என்ப’’ என்றார்.
மற்றும் இவை ஏனை யெழுத்துக்களொடு  மயங்கி  வருங்கால் தம் வன்மை
திரியுமாதலின்    தனித்தும்    இணைந்தும்   வருமிடத்தே   இவ்வன்மை
தோன்றுமென அறிக. வளி காரணமாக இவை வன்கணம் எனப்படும்.
 

சூ. 20:

மெல்லெழுத் தென்ப ஙஞண நமன

(20)
 

க-து:

இதுவுமது
 

பொருள்:ஙஞணநமன என்னும்  இவ்வாறனையும் மெல்லெழுத்து எனக்
கூறுவர் புலவர்.
 

இவை ஆறும் மேற்கூறிய வல்லெழுத்துப் பிறக்குமிடத்தே பிறந்து நிற்க,
மூக்கின்   வளியிசை  அவற்றை   வெளிப்படுத்தலின்  அவ்வளியிசையின்
மென்மை, எழுத்தின் மேலேற்றிக் கூறப்பட்டது. இவற்றை மென்கணம்
என்பர்.
 

சூ. 21:

இடையெழுத் தென்ப யரல வழள

(21)
 

க-து:

இதுவுமது
 

பொருள்:யரலவழள    என்னும்     ஆறனையும்    இடையெழுத்து
எனக்கூறுவர் புலவர்.
 

இவை ஆறனையும்  பிறப்பிக்கும்  வாயுறுப்புக்கள்  நன்கு  ஊன்றாமல்
நலிந்துநிற்க,  மிடற்று   வளியிசை   இவற்றை  ஏந்தி  வெளிப்படுத்தலின்
இடையெழுத்தெனப்பெற்றன. இவை இடைக்கணம் எனப்படும்.
 

அஃதாவது ஏனைய மெய்களைப்போல முழுதுந்தடையுறாமல் உயிர்ப்புச்
சிறிது  வெளிப்பட  இடைவெளியுற்று  நிற்றலின்   ஒலிப்பு  முறைமையான்
இடையெழுத்தெனப் பெற்றன என்க.