நூன்மரபு89

காணலாமென்பதும்  புலனாகும்.  இதுபற்றிய விரிவான விளக்கத்தை எனது
மெய்ம்மயக்க ஆய்வுக்கட்டுரையுள் கண்டுகொள்க.
 

மற்று இதனொடு அடுத்த  சூத்திரத்தையும்  சேர்த்து  ஒரு  சூத்திரமாக
வைத்து உரை காணலே முறைமையாயினும் உரையாசிரியன்மாரான் நேர்ந்த
வழக்கினை   மாற்றாமல்   இவ்வுரை    வரையப்படுகின்றது.    ஆதலின்
பின்வரும் நூற்பாக்கள்தொறும் இதனைக்கூட்டிப் பொருள் கொள்க.
 

சூ. 23:

டறலள என்னும் புள்ளி முன்னர்க்

கசப என்னும் மூவெழுத் துரிய

(23)
 

க-து:

கசப என்பவை டறவொடும் லளவொடும் மயங்கும் என்கின்றது.
 

பொருள்:மெய்ம்மயங்குடனிலை  தெரியுங்காலைச்சொற்கு   உறுப்பாக
டற என்னும்  வல்லெழுத்தும்  லள  என்னும் இடையெழுத்தும்  புள்ளியாக
நிற்க அவற்றின் முன் தொடரும் கசப என்னும் (உயிர்)  மெய்யெழுத்துக்கள் அவ்வொலியொடு மயங்கற்கு உரியவாகும்.
 

எ - டு

வட்கார் - கற்க, - செல்க - கொள்க எனவும்

வெட்சி - முயற்சி - வல்சி - நீள்சினை எனவும்

நுட்பம் - கற்பனை - செல்ப - கொள்ப எனவும் வரும்
 

இவை ஒருசொல் - நீள்சினை என்பது வினைத்தொகை மொழி. முட்காடு
- கற்குவியல் - பல்குன்றம் - வாள்கடிது  எனப்  புணர்  மொழிக்கண்ணும் கண்டுகொள்க.
 

இவை  வல்லெழுத்தொடு   மயங்குங்கால்  தம்  வன்மை  திரியாமலும்
இடையெழுத்தொடு   மயங்குங்கால்   திரிபுற்றும்   நிற்றலை   ஒலித்தறிக.
மெய்,  புள்ளி,   உயிர்மெய்   என்பவை  மெய்யின்   நிலைகளேயாதலின்
ஈண்டு  வந்தியையும்   மெய்  உயிர்மெய்  என்றறிக.  மயக்க  இலக்கணம்
முழுதிற்கும் இதனைக் கடைப்பிடிக்க.
 

சூ. 24:

அவற்றுள்

லளஃகான் முன்னர் யாவவும் தோன்றும்

(24)
 

க-து:

லள   என்னும்  இடையெழுத்தின்    முன்,    யவ    என்னும்
இடையெழுத்து மயங்குமெனக் கூறுகின்றது.
 

பொருள்:மேற்கூறிய நான்கனுள்  லள  என்னும்  இடையெழுத்துக்கள்
புள்ளியாக    நிற்க    அவற்றின்    முன்    ய வ   என்னும்   (உயிர்) மெய்யெழுத்துக்களும் தொடர்ந்து மயங்குதற்குரியவாம்.