நன்னூல் காண்டிகையுரை

*சிறப்புப் பாயிரம்

0மலர்தலை யுலகின் மல்கிரு ளகல
இலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியி னொருதா னாகி முதலீ
றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த
அற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின்
மனவிரு ளிரிய மாண்பொருண் முழுவதும்
முனிவற வருளிய மூவறு மொழியுளுங்
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள்
அரும்பொரு ளைந்தையும் யாவரு முணரத்
தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
இகலற நூறி யிருநில முழுவதுந்
தனதெனக் கோலித் தன்மத வாரணந்
திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை வினோத னமரா பரணன்
மெழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே .
 
(இ-ள்) மலர் தலை உலகின் - பரந்த இடத்தையுடைய உலகத்தின் கண்ணே ; மல்கு இருள் அகல-நிறைந்த கண் இருள் கெட ; இலகு ஒளி பரப்பி - விளங்கும் கிரணத்தை விரித்து ; யாவையும் விளக்கும் பரிதியின் - கண்பொறிக்கு விடயமாகிய உருவங்கள் எல்லாவற்றையும் காட்டும் சூரியனைப் போல் ; ஒரு தான் ஆகி - உலகங்களுக்கு எல்லாந் தான் ஒரு முதலேயாகி ; முதல் ஈறு ஒப்புஅளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த - தோற்றமும் ஒடுக்கமும் உவமையும் அளவும் விருப்பும் வெறுப்புமாகிய இவைகளின் இயல்பாகவே நீங்கி நிற்றலினாலே தலைவனாகிய ; அற்புத மூர்த்தி - ஞானமே திருமேனியாக உடையவன் ; தன் அலர்தரு தன்மையின் - தனது மலர்ந்த குணமாகிய கருணையினாலே , மன இருள் இரிய - உயிர்களின் மனத்து இருளாகிய அஞ்ஞானங் கெட ; மாண்பொருள் முழுவதும் - மாட்சிமைப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருளையும் ; முனிவுஅற அருளிய விருப்புடன் அருளிச் செய்த ; மூவறு மொழியுளும் பதினெண் நிலத்து மொழிகளுள்ளும் , குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின் - கிழக்கே கீழ்கடலும் தெற்கே கன்னியாகுமரியும் மேற்கே குடகநாடும் வடக்கே திருவேங்கடமும் என்று சொல்லப்படும் நான்கு எல்லையினையுடைய நிலத்து மொழியாகிய ; இருந்தமிழ்க் கடலுள் - பெரிய தமிழென்னும் கடலுள் ; அரும்பொருள் ஐந்தையும் - அருமையாகிய எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்து பொருளையும் ; யாவரும் உணர - இலக்கியப் பயிற்சியில் வலியவரே அன்றி எளியவரும் அறியும் பொருட்டு ; தொகை வகை விரியின் தருக என - தொகுத்தும் விரித்தும் செய்யப்படும் யாப்பினாலே பாடித் தருக வென ; துன்னார் இகல் அறநூறி - பகைவரது பகைமைகெட அவரை அழித்து ; இரு நிலம் முழுவதும் தனது எனக் கோலி-பெரிய பூமி முழுவதையும் தன்னுடையதாகப் பற்றிக் கொண்டு ; தன் மதவாரணம் திசை தொறும் நிறுவிய திறல் உறு-தன் மதயானைகளை எட்டுத் திக்கிலும் திக்குயானைகள்போல நிறுத்திய வெற்றி மிகுந்த ; தொல் சீர் - தொன்று தொட்டு வரும் கீர்த்தியையும் , கருங்கழல் - பெருமை பொருந்திய வீரக் கழலையும் ; வெண்குடை - வெண்கொற்றக் குடையையும் ; கார் நிகர் வண்கை - மேகம் போலுங்கொடையையுடைய கையையும் ; திருந்திய செங்கோல் - கோடாத செங்கோலையும் உடைய , சீய கங்கன் - சிங்கம் போன்ற கங்கன் ; அருங்கலை வினோதன் - அருமையாகிய நூல்களை ஆராய்தலே பொழுதுபோக்கும் விளையாட்டாக உடையவன் ; அமர் ஆபரணன்-போர் செய்தலினாலே தன் மேல்படும் பெரிய காயங்களையே ஆபரணமாக உடையவன் ; மொழிந்தனன் ஆக- சொன்னானாக ; முன்னோர் நூலின் வழியே - தொல்லாசிரியருடைய இலக்கணநூலின் வழியே ; நன்னூற் பெயரின் வகுத்தனன் நன்னூல் என்னும் பெயரினாற் செய்தனன் ; பொன் மதிற் சனகை - பொன் மதிலினாலே சூழப்பட்ட சனகாபுரத்துள் இருக்கும் , சன்மதி முனி அருள் - சன்மதி முனிவன் பெற்ற ; பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னும் நாமத்து - சொல்லுதற்கு அரிய ஞானவொழுக்கச் சிறப்பையும் பவணந்தி யென்னும் பெயரையுமுடைய இருந்தவத்தோன் - பெரிய தவத்தினையுடையோன் .

சூரியன் தன் கிரணத்தினாலே புற இருளை அகற்றிக் கண்பொறிக்கு விடயமாகிய உருவங்களை விளக்குதல் போலக் , கடவுள் தன் கருணையினாலே அகவிருளை அகற்றி அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருளையும் விளக்கப்பெற்ற பதினெண்பாடைகளுள்ளும் , கிழக்கே கீழ்கடலும் தெற்கே கன்னியாகுமரியும் மேற்கே குடகநாடும் வடக்கே திருவேங்கடமும் எல்லையாகவுடைய நிலத்து மொழியாகிய தமிழ்ப் பாடையினுள் , எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்திலக்கணத்தையும் இலக்கியப் பயிற்சியின் வலியவரேயன்றி எளியவரும் அறியும் பொருட்டுத் , தொகுத்தும் வகுத்தும் விரித்தும் செய்யப்படும் யாப்பினால் செய்து தருக எனச் சீயகங்கன் சொல்லத் , தொல்லாசிரியர் நூலின் வழியே ; நன்னூல் என்னும் பெயரினால் செய்தனன் பவணந்தி முனிவன் என்பதாம் .
#1ஆக்கியோன் பெயர்-பவணந்தி முனிவன்
2வழி-முன்னோர் நூலின் வழி
3எல்லை-குணகடல் குமரி குடகம் வேங்கடம் என்னும் நான்கு எல்லை
4நூற்பெயர்-நன்னூல்
5யாப்பு-நிகண்டு கற்று , இலக்கியப் பயிற்சி செய்தபின் இந்நூல் கேட்கத் தக்கது .
6நுதலிய பொருள்-அரும்பொருள் ஐந்து
7கேட்போர்-இலக்கியப் பயிற்சி செய்தவர்
8பயன்-மொழித்திறத்தின் முட்டறுத்தல்
9காலம்-சீயகங்கன் காலம்
10களம்-சீயகங்கன் சபை
11காரணம்-சீயகங்கன் சொன்னமையும் யாவரிடத்தும் இரக்கமுடைமையும்

சிறப்புப் பாயிரம் முற்றும்


* இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரமாக விளங்கும் இப்பாடல் யார் இயற்றியது என்று தெரிய வில்லை.

# மேலே பாயிரவியலில் கூறப்படும் சிறப்புப்பாயிரத்திற்குரிய 11 இலக்கணங்களும் அமைந்துள்ளமை காண்க .