பக்கம் எண் : 151
  

நன்னூல் விருத்தியுரை
 

     இ-ள்: இம்மூன்று எழுத்தும் மொழிக்குப் புறத்தும் அகத்தும் முதற்கண் தனித்துச்
சுட்டுப்பொருள் உணர்த்த வரின் சுட்டெழுத்தாம் எ-று.

     ‘முதல்’ எனப் பொதுப்படக் கூறினமையின் புறத்தும் அகத்தும்57 என்பது
பெற்றாம்.

     உ-ம்: அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன் எனவும் அவன், இவன்,
உவன்எனவும் வரும்.

     அவன் என்பதன்கண் அகரம் அறம் என்பதன்கண் அகரம்போலப்
பின்னெழுத்துக்களோடு தொடர்ந்து நின்று ஒரு பொருளை உணர்த்தாது, மலையன்
என்பதன்கண் பகுதிபோல வேறு நின்று சுட்டுப்பொருள் உணர்த்தலின் அகத்து வரும்
இதனையும், ‘தனிவரின்’ என்றார். இவ்வுரை வினாவிற்கும் கொள்க. (11)
 

வினாவெழுத்து
 

67.

எயா முதலும் ஆஓ வீற்றும்
ஏயிரு வழியும் வினாவா கும்மே.

     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: புறத்தும் அகத்தும் மொழிமுதற்கண் எகரமும் யாவும் ஈற்றின்கண்
ஆகாரமும் ஓகாரமும் இவ்விரண்டு இடத்தினும் ஏகாரமும் தனித்து வினாப்பொருள்
உணர்த்தவரின் வினாவெழுத்து ஆம் எ-று.

     மேல், “தனிவரின்” (நூ. 66) என்றதனை ஈண்டும் கூட்டுக. இவை புறத்தும்
அகத்தும் வருதல் ஏற்றபெற்றி கொள்க.

     ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்னும் உத்தியான் யா வினாவையும்
உடன் கூறினார்.

     உ-ம்: எக்கொற்றன் எனவும் எவன் எனவும் யாவன் எனவும் முதற்கண் வந்தன.
கொற்றனா, கொற்றனோ என ஈற்றின்கண் வந்தன. ஏவன், கொற்றனே என ஈரிடத்தும்
வந்தது. ஏனைப் பெயர்வினைகளோடும் ஏற்றபெற்றி ஒட்டிக்கொள்க. (12)


வல்லினம்
 

68.

வல்லினங் கசடத பறவென வாறே.
               
       எ-னின், இதுவும் அது.
---------------------------------
     57மயிலைநாதர் (நன். 65) இவ்வாறு கொள்ளாமல் மொழிமுதற்கண் தனித்து நிற்பின் என்று உரை கூறிப் புறச்சுட்டுக்கு மட்டுமே உதாரணம் காட்டுவார்.