பக்கம் எண் : 152
  

நன்னூல் விருத்தியுரை
 

     இ-ள்: இவ் ஆறும் வல்லினமாம் எ-று. (13)
 

மெல்லினம்
 

69.

மெல்லினம் ஙஞணந மனவென வாறே.

     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: இவ் ஆறும் மெல்லினமாம் எ-று. (14)


இடையினம்
 

70.

இடையினம் யரலவ ழளவென வாறே.
    
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: இவ் ஆறும் இடையினமாம். (15)
 

இனவெழுத்து
 

{71}

ஐஒள இஉச் செறிய முதலெழுத்
திவ்விரண் டோரின மாய்வரன் முறையே.
               
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: இனம் இல்லாத ஐகார ஒளகாரங்கள் ஈகார ஊகாரங்கட்கு இனமாகிய இகர
உகரங்களைத் தமக்கும் இனமாகப் பொருந்த, முதலெழுத்துக்கள் இவ்விரண்டு ஓர்
இனமாய் வருதல் முறை. ஆதலால் அவை இனவெழுத்து என்றும் பெயரவாம் எ-று. (16)


இனத்திற்குக் காரணம்
 

72.

தான முயற்சி யளவு பொருள்வடி
வானவொன் றாதியோர் புடையொப் பினமே.
 
     எ-னின், மேல் இனம் என்றதற்குக் காரணம் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்; தானம் முதலியவாய இவற்றுள் ஒன்று முதலாக ஒருபுடை ஒத்தலால்
இனமாம் எ-று.

     தானம் உரம் முதலியன. முயற்சி இதழ்முயற்சி முதலியன. அளவு மாத்திரை.
பொருள் பாலன் விருத்தன் ஆனாற்போலக் குறிலினது விகாரமே நெடில் ஆதலின்
இரண்டற்கும் பொருள் ஒன்று என்று முதல்நூலான் நியமிக்கப்பட்ட பொருள்.