பக்கம் எண் : 53
  

பதிப்புரை


வரலாற்றைத் தொடங்கி வைத்தார். அவர் தமது காண்டிகையைச் சாலிவாகன சகாப்தம்
1756 ஜெய வருடம் (கி. பி. 1834) அச்சிட்டார். ஆகவே முதன் முதலாக அச்சுத்தேரில்
உலா வந்த மரபிலக்கணம்78 நன்னூலே. தமிழிலக்கணப் பதிப்புரை வரலாற்றுக்குப்
பிள்ளையார் சுழி போட்டதும் இந்நூலே.

     நூலாசிரியர் உரையாசிரியர்கள் போலவே பதிப்பாசிரியர்களும் மதிக்கத்
தக்கவர்கள். ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, சாமிநாதையர், பவானந்தம்
பிள்ளை, வையாபுரிப் பிள்ளை போன்ற நல்ல பதிப்பாசிரியர்களின் ஆறா அயரா
உழைப்பின் பயனே இன்று நாம் பெற்றுள்ள இலக்கிய இலக்கணச் செல்வங்கள். அது
மட்டும் அல்ல. பதிப்பு வரலாறு இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதி. எனவே
பதிப்பாசிரியர்களைப் பற்றிய செய்திகளும் பதிப்பு விவரங்களும் இலக்கிய வரலாறுகளில்
இடம் பெற வேண்டும். ஆனால் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களில் பெரும்பாலோர்
இந்த உண்மையை நன்றாக உணரவில்லை. இதை ஓரளவு உணர்ந்திருந்த மயிலை சீனி.
வேங்கடசாமி, மு. அருணாச்சலம், இரா. இளங்குமரன் போன்ற ஒருசிலரும் பதிப்பு
விவரங்களுக்குச் சிறப்பிடம் தரவில்லை. அதனால் அவர்கள் கொடுத்துள்ள பதிப்பு
விவரங்கள் முழுமையாகவும் நம்பகமாகவும் அமையவில்லை. விசாகப்பெருமாளையர்
காண்டிகையின் பதிப்பு விவரமே அதற்குப் போதிய சான்று. இந்த உரை வெளிவந்த
ஆண்டு கி. பி. 1875 என்று மயிலை சீனி. வேங்கடசாமியும் கி. பி. 1880 என்று மு.
அருணாச்சலமும் கி. பி. 1875 என்று இரா. இளங்குமரனும்79 மனம் போன போக்கில்
குறிப்பிட்டுள்ளனர். பவனாந்தம் பிள்ளை 1922), சாமிநாதையர் (1925), தண்டபாணி
தேசிகர் (1957), சோம. இளவரசு (1981) போன்ற பதிப்பாசிரியர்கள் தங்கள் நன்னூல்
பதிப்புகளில் பயனுள்ள முன்னுரைகளை எழுதியிருந்தாலும் பதிப்புத் தகவல்களுக்கு
அவர்களும் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதனால் நன்னூல் பதிப்புச்
செய்திகள் அவற்றில் செப்பமாகப் பதிவாகவும் இல்லை.

     நன்னூல் பதிப்பு வரலாற்றுக்கு உதவும் ஆய்வு மூலங்கள் தமிழில் இல்லாமல்
இல்லை. தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் தொடர்ந்து வெளியிட்டு வரும் தமிழ்நூல்
விவர அட்டவணைத் தொகுதிகள், நூலகங்கள் வெளியிட்டுள்ள நூல்பட்டியல்கள்,
-----------------------------
     78நன்னூலுக்கு முதல் காண்டிகையுரையை விசாகப்பெருமாளையர் வகுத்தார்
என்றும் 1839-இல் முதன் முதல் அவர் அதை வெளியிட்டார் என்றும் அவருக்கு
முன்பே தாண்டவராய முதலியார் 1835-இல் நன்னூலை அச்சிட்டுவிட்டார்
என்றும் க. ப. அறவாணன் (1977. பக். 60, 183, 213, 354) திரும்பத் திரும்பச்
சொல்லுவார். ஆனாலும் அவை உண்மை அல்ல.
     79மயிலை சீனி. வேங்கடசாமி, 1962, பக். 296; மு. அருணாச்சலம், 1970.
பக். 173. இரா. இளங்குமரன், 1988. பக். 307.