கொடிநிலையாவது, கொடியது தன்மை கூறுவது.
கந்தழியாவது, செருவில் தெட்பம் உடைமை.
வள்ளியாவது, முருகவேளைக் குறித்தது; பிறவுமன்ன.
இனி ஒருசாரார் சொல்லுமாறு:- அறமும், அறக்காரணமும், பொருளும், பொருட்காரணமும், இன்பமும், இன்பக்காரணமும் என்றிவ்வகைப்படுத்தும்; அகப்பொருளும், புறப்பொருளும், அகப்புறப் பொருளும் என மூன்று வகைப்படுத்தும் மொழிவர்;
"அறம்பொரு ளின்ப மறனே காரணம்
அகமும் புறமு மகப்பு றமுமென
விலக்கில் இன்னவாகும் பொருட்டெரி வகையே"
என்றாராகலின். அறன் முதலாகிய மூன்று பொருளும் அகவுரையிற் கொள்க.
"களவுங் கற்புங் கைகோ ளாக
அளவி னன்பின தகமெனப் படுமே."
என்றமையால் அகப்பொருளறிக.
"அறத்தினும் பொருளினும் அன்பினு மறத்திறம்
வரைத்த நோக்கத்துப் புறத்திணை யாகும்."
"அவைதாம்,"
"வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி யுழிஞை தும்பை வாகை
எச்சப் படலமோ டிவையென மொழிப."
என்றமையாற் புறப்பொருளறிக.
"அறனும் வாட்கையு மொருதலைக் காமமும்
பொதுவியல் பாடா ணயநிலைப் படலமென்
றிவைக ளனைத்து மகப்புற மாகும்."
என்றமையால், அகப்புறப் பொருளை அறனும், வாட்கையும், ஒருதலைக் காமமும், பொதுவியலும், பாடாண் பாட்டும், கூத்த மார்க்கமும் என அறுவகையாய்ப் பகுதிப் படுத்துவார் எனக் கொள்க.
அஃதாமாறு: அறம் மனையறமும், துறவறமும் என விருவகைத்து. அவற்றில்,
"கொடுத்தலு மளித்தலுங் கோடலு மின்மையும்
ஒழுக்கத்தொடு புணர்தலும் புணர்ந்தோர்ப் பேணலும்
வழுக்கில் பிறவு மனையற வகையே."