பக்கம் எண் :
 
231

231. நூ: வன்றொடர் அல்லன ஐந்தும் வலிவரின்
       அல்வழிக் கண்மிகா; வேற்றுமைக் கண்ணே,
       ஒற்றிடை மிகாநெடில் ஒழிந்தனமிகுமே.

    பொ: வன்றொடர் அல்லாத ஐந்தும் வலிமுதல் வந்தால்
அல்வழிப்பொருளில் மிகா.  வேற்றுமையில் ஒற்றிடை மிகாதுநிற்கும் நெடில்
அன்றிப் பிறநான்கும் மிகும் என்றவாறு.

    சா: இது பண்டைய ஒலி மாற்றம் பற்றிப் புது விதி கொளுவியது
முன்னூல்களில், ‘இடைத்தொடர், ஆய்தத்தொடர், ஒற்றிடை மிகா
உயிர்த்தொடர், நெடில்தொடர் - வேற்றுமையினும் மிகா என்பதுவிதி. 
இந்நாள் திரிந்தது.

    சா: அல்வழி; வந்து கொடுத்தான், எஃகு திண்ணியது, ‘சார்பு
தரும்நோய்’; உருபுபுணரியல், பாடு கிடந்தாள்.
வேற்றுமை: குரங்குக்குட்டி, எஃகுத்தொழில்,
மரபுத்தொடர், மார்புக்கூடு, தூசுப்படை.

    சாய்வுப்பலகை, மருந்துக்கடை, வேற்றுமைத்தொகை யென்க.  அங்குக்
கொண்டான், இங்குக் கிடைக்கும் எனக் காட்டுவன இக்கால் வலிக்காது
ஒலித்தல் உணர்க.

    அரசுப் போக்குவரத்து, அரசுச் செயலகம் என வேண்டுவது இந்நாள்
ஒலி நிலை.

திசைப்பெயர்

232. நூ: நேர்த்திசை நான்கும் கோணத்திசைகள்
        நான்கினைக் குறிக்க வடக்கு தெற்கு
        முன்னுற ஏனை இருபெயர்ப் புணரும்;
        முன்னன ‘வடதென்’ என்றுருப்பெறுமே.

    பொ: நேர்த்திசைப் பெயர்கள் நான்கும் கோணத்திசைகள் நான்கின் பெயரைக் குறித்தல் வேண்டின் வடக்கு, தெற்கு என்பன முன் அமையப் பிறவிரண்டு பெயர்களும் பின் வந்து சேரும்.  முன்னிரண்டும் தன் உருவம் வட, தென் என்றாக நிற்கும்.

    வடகிழக்கு; வடமேற்கு; தென்கிழக்கு; தென்மேற்கு.

    பொதுப்பெயர் வரின் மேலிரண்டு திரிபு இருக்க, பிறவிரண்டும் திரியுங்கால் மேற்கு மேல் என்றும் கிழக்கு கீழ் என்றும் திரியும்.

    குணக்கு குடக்கு என்பன இறுதியும் ஈற்றியலும் கெடும்

    சா: கீழ்த்திசை, வடபுலம், தென்னகம், மேனாடு, மேன்மாடம் என்று ‘ல்-ன்’ ஆக மாறுதல் புணர்ச்சித் திரிபே அன்றி வேறன்று.  தென்-தெல் ஆகாமை நோக்குக.