பொ:
திணையும் பாலும் வேறுவகைப்பட்ட பல - பொருள்கள் கலந்து
நின்றவிடத்து அவை சிறப்பினாலும்,
மிகுதியினாலும், இழிவினாலும்
செய்யுளுள் ஒரு முடிபு கொள்ளும் என்றவாறு.
இவற்றிற்குச் சான்றுகள் பதினெண் கணக்கின் ஒன்பதற நூல்களில் பரக்கக் காணலாம்.
272. நூ: உருவகம் உவமையில் முதல்சினை திணைபால்முரண்
பொ:
உருவகம் உவமை முதலிய அணி நயங்களில் முதலும் சினையும்,
திணையும் பாலும் முரண்படலுமாம்.
வி: ‘திணைபால் முரண்’ என்பது தனிச்சீர்ப்படு வந்ததெனின்
‘சாவவென் மொழியீற்றுயிர்மெய்
சாதலும்விதி’ என்னும் நன்னூலிடத்துக்கனிச்
சீராதல் காண்க. அன்றி, ‘உயிர்மெய்சா’ எனப்
பிரித்து எஞ்சிய விளச்சீரே
எனின் ‘திணைபால்முரண்’ என்பதும் சாய்ச்சீராம் அமைதியை எம்
‘யாப்பியலில்’ கண்டுகொள்க. முதல் சினைபால் என்றே காய்ச்சீராம் எனின்
முதல்சினை-திணைபால்
என்ற ஒழுங்குணரவேண்டுதலின் அமைத்திலம்.
‘கூற்றமோ கண்ணோ பிணையோ’
‘கயல்போலும் கண்’
உயர்திணைச் சினைக்கு அஃறிணை முதல் உருவகமும் உவமையும்
ஆயின.
தோகைமயிலன்னாள் என்பது திணையொடு பால்மாறி வந்தது. மாசறு
பொன்னே என்னும் கோவலன் பாராட்டும்
பிறவுமன்ன.
நூற்பாவிற்குத் தனித் தெளிவிலக்கணம் இன்றி அகவல் தழுவி
நடத்தலின் பிறிதோர் நூற்பாவைக்
காட்டி அமைத்தாம். நன்னூலில் ஒரு
நூற்பாப் பதினோர் அடி தவிர பிற ஏழுவரிக்கு மிகாமையும் தொல்காப்பியம்
அளவிறத்தலும் காண்க.
273. நூ: மிக்குணர்வால் திணை பால்வழு இயல்பே.
பொ:
மிகுந்தெழும் மாந்த உணர்வெழுச்சிப் பாடலில் திணையும்
பாலும் வழுவி வருதல் இயல்பே. அது
வழுவமைதியாம்.
சா:
அன்பு மிகுதிக் கொஞ்சலில் மகனை அம்மா என்றலும் மகளை
(இ)ராசா என்றலும் பால் வழுவே.
‘என்னைப் பெற்ற கண்ணு’ என்பது
ஈனுயிர்ப்புக் கடுமையில் பிழைத்தமை கொண்டு இன்று புகழ்தல், திணை
வழுவமைதி. தந்தையும் தாயுமாய் இருந்து வளர்த்தான்; தாயும் ஆனவர்:
என்பன பால் வழுவமைதி.
எண்
- இடம்
274. நூ: எண்ணும் இடமும் வழுவலும் ஆகும்.
பொ:
எண், இடம் இரண்டும் தம்முள் வழுவிவருதலும் உளவாம்.
|