பக்கம் எண் :
 
பொருளதிகாரம்228முத்துவீரியம்

என்பது, வேற்றரசர்க்குத் தூதுபோய்க் கூறல் அந்தணர் அரசர்க்கு முரியன. (49)

இதுவுமது

818. பெருமா னாற்சிறப் புப்பெயர் பெறினே
     ஒழிந்தோ ரிருவர்க்கு முரிய வாகும்.

என்பது, நாடுகாவல் தூதுபோதல் அரையனாற் சிறப்புப் பெயர் பெற்றவராயின்
வணிகர் சூத்திரர்க்கும் உரியன. (50)

புறத்திணை

819. புறத்திணை யகத்திணைப் புறமா கும்மே.

என்பது, அகத்திணைப்புறன் புறத்திணை.

(வி-ரை.) வெட்சி குறிஞ்சிக்கும், வஞ்சி முல்லைக்கும், உழிஞை மருதத்திற்கும்,
தும்பை நெய்தற்கும், வாகை பாலைக்கும், பாடாண் கைக்கிளைக்கும், காஞ்சி
பெருந்திணைக்கும் புறனாகும். இது தொல்காப்பியத்தைத் தழுவியதாகும்.

எனினும் காஞ்சித் திணைக்கு இவர் வகுக்கும் இலக்கணம் புறப்பொருள்
வெண்பாமாலையைத் தழுவியதாகும். நிலையாமை பொருளாகக் காஞ்சி வருமென்பர்
தொல்காப்பியர். நொச்சியைத் தனித்திணையாகக் கூறுவதும் ஐயனாரிதனார் நெறியேயன்றித்
தொல்காப்பியர் நெறியன்று. (51)

புறத்திணையின் வகை

820. அதுதான்,
     வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
     நொச்சி யுழிஞை தும்பை வாகை
     எச்சப் படலமோ டிவையென மொழிப.

என்பது, அதுதான் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை
வாகையாம். (52)

வெட்சி

821. போகிப் பகைவரூர்ப் புக்கவர் நிரையைக்
     கவர்தல் வெட்சியாங் காணுங் காலே.

என்பது, பகைவர் நாட்டிற் போய்ப்புக்கு அவர் நிரையை ஓட்டிக்கொண்டுவரல்
வெட்சிமாலை. (53)