பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்49முத்துவீரியம்

(இ-ள்.) மேற்கூறிப் போந்தவற்றுள் மக்களுந் தேவரும் நரகரு முயர்திணையாம்.
அவரல்லாத பிறவெல்லா மஃறிணையாம்.

(வி-ரை.) மக்கட் சுட்டு-மக்கள் என்று நன்கு மதிக்கப்படும் பொருள்.

எனவே அங்ஙனம் மதித்தற்குரிய பண்பு அவர்மாட்டில்லை யாயின் மக்களாகார்
என்பது கருத்து. நூற்பாவின் போக்கு இங்ஙனம் இருக்க, ‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை’
என்ற நன்னூல் கருத்தினை நோக்கி உரை எழுதியுள்ளமை அத்துணைப் பொருத்தம் இன்றாம்.
நரகர் என்பார் ஆணும் பெண்ணுமாய்க் கூடி யின்பம் நுகர்தலின்மையின் அவர்களைச்
சேர்த்தல் கூடாது என்பர் தெய்வச்சிலையார். (13)

சாரியை வரும் இடம்

173. அவைதாம்,
     சாரியைச் சொற்களைச் சார்ந்துநின் றியலும்.

(இ-ள்.) மேற்கூறிப்போந்த இருதிணைகளுஞ் சாரியைச் சொற்களைச் சார்ந்தொழுகும்.

(வ-று.) ஆடூஉ + கை = ஆடூஉவின்கை; மகடூஉ + கை = மகடூஉவின்கை.

(வி-ரை.) தனியாக நிற்கும் நிலைமொழியையும் வருமொழிகளையும் தம்மில் சார்தற்
பொருட்டு இடையில் வரும் சொற்களை அல்லது எழுத்துக்களைச் சாரியை யென்பர். இவை
சொற்களைச் சார்ந்தல்லது தனித்து வாரா.

ஆடூஉ + கை = ஆடூஉவின்கை; இவ்விடத்து இன்னென்பது நிலைமொழி
வருமொழிகளை இயைவித்து, அவற்றின் இடையே நிற்றல் காண்க. (14)

சாரியைகள்

174. அத்தம் மானக் கின்னன் னொன்னிக்
     கற்றுத் தந்நம் நும்மு மாம்பிற.

(இ-ள்.) அத்து, அம், மான், அக்கு, இன், அன், ஒன், இக்கு, அற்று, தம், நம், நும்
ஆமெனவறிக.

(வி-ரை.) இவற்றுள் அத்து, அம், அக்கு, இன், அன், ஒன், இக்கு, தம், நம், நும்
என்பன ஆசிரியர் தொல்காப்பியர் கூறியவை. தொல்காப்பியர் வற்று எனக் கூறியதை
நன்னூலார் கூறியதுபோல அற்று என இவரும் கொண்டனர். இவர் புதிதாகக் கூறியிருப்பது
மான் என்பதாகும். (15)