பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்7முத்துவீரியம்

1. எழுத்ததிகாரம்

தற்சிறப்புப்பாயிரம்

எப்பொருள் வயினுயி ரெதிர்ந்து மறைகுவ
தப்பொரு ளடிதொழு தறைகுவன் எழுத்தே.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், தற்சிறப்புப் பாயிரம் உணர்த்துத னுதலிற்று.

என்னை,

‘‘தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்
எய்த வுரைப்பது தற்சிறப் பாகும்’’

என்றாராகலின்.

(இதன்பொருள்) ஐம்பெரும் பூதங்களும், அவற்றின்கண் தோன்றிய சராசரங்களும்
எப்பொருளின்கண் தோன்றி ஒடுங்குவ, அப்பொருளி னடியை வணங்கி யான்
எழுத்திலக்கணத்தைக் கூறுவேனென்க.

ஏகாரம் ஈற்றசை.

எழுத்ததிகார மென்பது, எழுத்தினது அதிகாரத்தை யுடையதென
அன்மொழித்தொகையாய்ப் படலத்திற்குக் காரணக்குறியாயிற்று. அதிகாரமென்பது
அதிகரித்தல்; அஃது இருவகைப்படும். அவற்றுள், ஒன்று அரையனிருந்துழியிருந்து
தன்னிலமுழுதும் தன்னாணையில் நடப்பச் செய்வது போல, ஒருசொல்நின்றுழி நின்று
பலசூத்திரங்களும் பலவோத்துக்களும் தன்பொருளே நுதலிவரச் செய்வது. ஒன்று சென்று
நடாத்தும் தண்டத் தலைவர்போல ஓரிடத்துநின்ற சொல் பல சூத்திரங்களோடு
சென்றியைந்து தன்பொருளைப் பயப்பிப்பது, எழுத்தை நுதலிவரும், பலவோத்தினது
தொகுதி ‘எழுத்ததிகாரம்’ என்றாயிற்றென்க.

(விளக்கவுரை) உலகிலுள்ள பொருள்களனைத்தும் தோன்றி ஒடுங்குவதற்குக் காரணமாக இருப்பது எப்பொருளோ, அப்பொருளை வணங்குவன் என்பதால் இவர்தம்
சமயநெறி விளங்குகிறது. ‘அந்தம் ஆதி யென்மனார் புலவர்’ எனச் சிவஞானபோதம்
கூறுவதும் ஈண்டு உணரத்தக்கது.