சொற்பிரிவால் ஊடல்உண்டாம் பாணர்,இரு பாங்கர், துணைவி,கண்டோர், பாகன்,பா டினி,கூத்தர், இளையர், தற்புதல்வன், செவிலி,அறி வோர்,காமக் கிழத்தி, சார்விருந்தாற் றாமையிலவ் ஊடல்தீர் மருந்தே [14] | இது பிரிவு, ஊடல் ஆகியவற்றை விளக்குகின்றது. உரை : பரத்தையிற் பிரிவு, ஓதற்பிரிவு, காவற் பிரிவு, அரசனுக்கு உதவிக்காகப் பிரிவு, தூதுவயிற் பிரிவு, பொருள் வயிற்பிரிவு எனக்கற்பின்கண் பிரியும் பிரிவு ஆறு வகைத்தாம் காவற்பிரிவுக்கும் பரத்தையிற் பிரிவுக்கும் குறிப்பிட்ட கால வரையறை இல்லை. தூதுவயிற்பிரிவு, உற்றுழிப் பிரிவு, பொருட்பிரிவு ஆகியவற்றிற்கு ஓராண்டும் கல்விக்காகப் பிரிவு மூன்று ஆண்டுமாம். பிரிவால் ஊடல் உண்டாகும். பாணர், இருவகைப் பாங்கர், துணைவி, கண்டோர், பாகன், பாடினி, கூத்தர், இளையர், தன்னுடைய புதல்வர், செவிலி, அறிவோர், காமக்கிழத்தியர், விருந்து செய்தல் ஆகிய அனைத்தும் ஊடலைத்தீர்க்கும் மருந்துகளாகும். விளக்கம் : இது நம்பியகப் பொருள் 62, 90, 89, 68 ஆகிய சூத்திரங்களைப் பின்பற்றியது. பாட. வி : விருந்து ஆற்கருமை (4வது வரி) என்ற மூலபாடம் விருந்து ஆற்றாமை என்று கொள்ளப்பட்டது. |