பக்கம் எண் :
 
எழுத்து அதிகாரம்39

            சில உயிரீறும் மெய்யீறுமாகிய சொற்களின் முடிபு

23.   உற்றஆ காரம் அகரமாய் ஓங்குகரம்
     பெற்றிடுநீ ஆமாவின் பின்னிறுதி - ஒற்றணையும்
     சாவவகம் என்புழிச் சார்ந்த இறுதியிடைப்
     போவதுயிர் மெய்யென்றே போற்று.

    
எ-ன்: ஒருசார் உயிரீறும் மெய்யீறும் முடியுமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

  
  இ-ள்: ஆகார உயிரீறாய் நின்ற சொற்கள், அகர வீறாய்ப் பின்னே
ஒரு உகரம் வந்து வகர உடம்படுமெய் மிக்கு முடியும். நீ, ஆ, மா என்னுஞ்
சொற்கள் இறுதி னகர வொற்றுப் பெற்று முடியும். சாவ, அகம் என நின்ற
சொற்களின்பின் ஏற்ற சொல் வந்தால், சாவ என்பதன் இறுதியில் நின்ற வகர
உயிர் மெய்யும், அகம் என்னும் சொல்லிடையினின்ற ககர உயிர்மெய்யும்
அழிந்து முடியும் எ - று.


   
 வ - று: இரா, நிலா, சுறா, புறா என்னுஞ் சொற்களின் இறுதியில்
நின்ற ஆகாரத்தை அகரமாக்கிப் பின்னே உகரத்தை மிகுத்து,

      
 அல்லாத வான்ற உயிர்ப்பின்னு மாவிவரில்
        வகரந் தோன்றும்             
   (நேமி. எழுத்து சூ.17)

      என்பதனால் வகர ஒற்றை மிகுத்து உகரத்தை ஏற்றி ‘இரவு
மனையிறந்த' எனவும், ‘நிலவுக் குவித்த' எனவும், ‘சுறவுத்தலை பேயக்கும்'
எனவும், ‘புறவுத்துயர்' எனவும் வரும். பிறவும் அன்ன.

      இனி நீ யென்பது குறுகி நின் கை, நின் செவி, நின் புறம், நின் வாய்
என்றாயிற்று.

      
 நீயென் றொருபெயர் நெடுமுதல் குறுகு
        மாவயி னகர மொற்றா கும்மே.     
 (தொல். உருபி. சூ.7)


என்றாராகலின்.

        ஆ என நிறுத்திக், கோடு, செவி, தலை, புறம் என வருவித்து,
ஆன்கோடு, ஆன்செவி, ஆன்றலை, ஆன்புறம் என முடிக்க. மாவென
நிறுத்திக் கோடு, செவி, தோல், புறம் என வருவித்து மான்கோடு, மான்செவி,
மான்றோல், மான்புறம் என முடிக்க.