பக்கம் எண் :
 
எழுத்திலக்கணம்014
அகரக் குறியாம்; ஆன்இளங் கன்றிற்கு
 இரங்கலில் மூலத்து எழுகால் துணைக்கொடு
 சிறிது வாய் திறந்து ஒலிக்கும்; அக்குறியின்
 ஈற்றின் வரைநுனி இலங்க வலந்தொட்டு
 இடம்வரை சுழித்தல் ஆகாரத்து இயல்பாம்;
 அவண்எழுந்து இருமடங் காம்அதன் தொனியே.
கிளியின் முகம் போன்று ஒரு சிறிய வளையமிட்டுக் கீழே இறக்கி அக்கோட்டை இடக்கைப்புறமாக இழுத்து மேல்நோக்கி வளைத்து இடைவெளியமையும் வண்ணம் மீட்டும் வலப்புறம் கொணர்ந்து முதலில் வரைந்த வளையமளவு மேலும், அதே அளவு கீழும் செங்குத்துக்கோடு வரைதல் அகரத்தின் வரிவடிவமாகும். அகரம் பசு தன் இளமையயுடைய கன்றிற்கு இரங்குவதைப் போன்ற ஓசையையுடையது. மூலாதாரத்தில் எழும் காற்றின் துணைகொண்டு வாயைச் சிறிது திறப்பதால் இவ்வெழுத்து பிறக்கும். இவ்வாறு எழுதப்பட்டஅகர வரிவடிவத்தின் இறுதிப்பகுதியில் உள்ள நேர்கோட்டில் இருந்து வலமிருந்து இடமாகச் சுழித்தால் ஆகாரத்தின் உருவம் வரும். இவ்வெழுத்தும் மூலாதாரத்திலேயே தோன்றி அகரத்தைவிட இருமடங்கு ஒலிக்கும் என்றவாறு.
ஆகாரம் இரு மடங்கு ஒலிக்கும் என்பதால் அருத்தாபத்தியாக அகரம் ஒரு பங்கு ஒலிக்கும் என்பது பெற்றாம். குறில், நெடில், மாத்திரை என்பன பற்றி அடுத்த இயலாகிய நிலை இயல்பில் கூறப்படும்.
தொல்காப்பியர் எழுத்துகளின் பிறப்புணர்த்தும் பொழுது கொப்பூழிலேயிருந்து மேல்நோக்கி எழுங்காற்று தோன்றி, அது தலை, மிடறு, நெஞ்சு ஆகிய மூவிடங்களில் நிலைபெற்று, எட்டு உறுப்புகளின் முயற்சியால் பிறக்கும் என்கிறார்.1 அவ்வாறு மிடற்றில் நிலைபெற்ற காற்றின் துணையால் உயிர் எழுத்துகள் தோன்றும் என்பதுவும் அவர் கோட்பாடு2.