பக்கம் எண் :
 

 266                                   யாப்பருங்கல விருத்தி

     இதன் பொழிப்பு : ஒழுகிய ஓசையினை உடைத்தாய், தம்முள் ஒத்து வந்த இரண்டு அடித்தாய், விழுமிய பொருளைப் பயந்து நிற்பது யாது? அது வெண் செந்துறை என்றும் செந்துறை வெள்ளை என்றும் வழங்கப்படும் (என்றவாறு).

     சீர் வரையறுத்திலாமையின், எனைத்துச் சீரானும் வரப் பெறும்.

     ‘அந்தம் குறையா தடியிரண் டாமெனிற்
     செந்துறை என்னும் சிறப்பின தாகும்’.

 என்றார் காக்கைபாடினியார்

     ‘ஈரடி இயைந்தது குறள்வெண் பாவே
     ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை’.1

 என்றார் அவிநயனார்.

     இனி அதற்குச் செய்யுள் வருமாறு

[வெண் செந்துறை]

     ‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
     ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை’.2

 எனவும்,

     ‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை
     என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’.3

 எனவும் இவை நாற்சீர் இரண்டடியால் வந்த செந்துறை வெள்ளை.

[வெண் செந்துறை]

     ‘நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள்
     கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே’.

 இஃது அறுசீர் அடியால் வந்த செந்துறை வெள்ளை. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.


  1. யா. வி. 59 உரைமேற். 2. முதுமொழி 1 - 1 3. கொன்றை. காப்பு.