பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           489

    முன் சொன்ன பூமருது பெற்ற பதின்மூன்றும், இவை நாற்பத் தெட்டும் கூடி நான்கெழுத்துச் சீராய வழி, ஆசிரிய அடித் தொகை அறுபத்தொன்று.

    என்னை?

[குறள் வெண்பா]

     ‘நாட்டிய நாலெழுத்துச் சீரால் அடித்தொகை
     கூட்டி அறுபதின்மேல் ஒன்று’.

 என்பவாகலின்.

    இனி ஐந்தெழுத்துச் சீராவது ‘மழகளிறு’ என்பது. அதுதான், ஒன்பது எழுத்து முதலாக இருபது எழுத்தின் காறும் உயர்ந்த பன்னிரண்டு அடியும்  பெறுவது.

    என்னை?

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]

     ‘ஐந்தெழுத் தாகும் மழகளி றச்சீரால்
     ஒன்பான் முதலா இருப துயர்த்தெண்ண
     வந்த அடிபன் னிரண்டு’.

 என்பவாகலின்.

    இவை பத்து இயற்சீருள்ளும் ஈரெழுத்துச் சீரால் ஐம்பதும், மூவெழுத்துச் சீரால் எண்பத்தெட்டும், நாலெழுத்துச் சீரால் அறுபத்தொன்றும், ஐந்தெழுத்துச் சீரால், பன்னிரண்டும் தலைப்பெய்ய, நான்கு நிலைமையானும் ஆயின ஆசிரிய அடித்தொகை இருநூற்று ஒருபத்தொன்று.

    என்னை?

[குறள் வெண்பா]

     ‘நான்கு நிலைமைக்கும் வந்த அடித்தொகை
     நான்கைம்பான் மேலொருபத் தொன்று’.

 என்பவாகலின்.

    இனி, ஆசிரியத்துள் அசைச் சீராயினவற்றால் அடியாமாறு: ஓரெழுத்துச் சீரும், இரண்டெழுத்துச் சீரும், மூன்றெழுத்துச் சீருமாக வழங்கா எனக் கொள்க.