எ-டு: 'ஆர வடமும் அதிசீத சந்தனமும்
ஈர நிலவும் எரிவிரியும் - பாரில்
துதிவகையான் மேம்பட்ட துப்புரவுந் தத்தம்
விதிவகையான் வேறு படும்'
துப்புரவு - அநுபவம். விரிதல் - மிகுதல்.
வி-ரை, இ-ள்: தண்ணிய முத்து மாலையும் மிகவும் குளிர்ந்த சந்தனமும், குளிர்ந்த நிலவும் பிரிவாற்றாது வருந்துபவர்க்கு நெருப்பின் வெம்மையைத் தருவனவாயின், உலகில் புகழ்தற்குரிய பொருள்களும் அவரவர் விதி வகைக்கேற்பத் தத்தம் நிலைமையினின்றும் வேறுபடும் என்பதாம்.
இதன்கண், `ஆரவடம், சந்தனம், நிலவு ஆகியன பிரிவாற்றாத பெண்டிர்க்கு நெருப்பாக இருக்கும்' என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும். இத்தன்மை அவற்றிற்குக் கூடாத்தன்மையாகும். இங்ஙனம் கூடாத தன்மையைக் கூடுவதாக்கி யுரைத்தற்கு,'நுகர்தற்குரிய பொருள்களெல்லாம் அவரவர் விதிவகையான் வேறுபடும்' என்ற உலகறி பொருளை ஏற்றிவைத்திருத்தலின், இது வேற்றுப் பொருள் வைப்பாயிற்று. முன்னிரண்டு அடிகளில். கூடாத தன்மையைக் கூட்டி யுரைக்கப் பட்டிருத்தலின் கூடா இயற்கை ஆயிற்று.
(6) கூடுமியற்கை என்பது கூடுவதாகக் கூறுவது.
எ-டு: 'பொய்யுரையா நண்பர் புனைதேர் நெறிநோக்கிக்
கைவளைசோர்ந் தாவி கரைந்துகுவார் - மெய்வெதும்பப்
பூத்தகையுஞ் செங்காந்தள் பொங்கொலிநீர் ஞாலத்துத்
தீத்தகையார்க் கீதே செயல்'
இ-ள்: எக்காலத்தும் பொய்யறியாத தலைவருடைய அலங்கரிக்கப்பட்ட தேர் வரும் வழிபார்த்துக் கைவளை வீழ உயிர் நைந்து விதனப் படுகின்ற மடவாருடைய மேனி அழலப் பூத்து விளங்கிவருத்துகின்றது சிவந்த நிறத்தையுடைய காந்தள்; கடல் சூழ்ந்த ஞாலத்துத் தீக்குணத் தார்க்கு ஈதன்றோ செயல் எ-று.
'தீத்தகையார்' என்றது தீயகுணத்தையுடையார்க்கும், தீப்போலச் சிவந்த நிறத்தையுடைய பூத்த காந்தளுக்கும் பெயர்.
வி-ரை:இதன்கண் ' தலைவனின் தேர் வரும் வழியைப் பார்த்து மனம் வெதும்புவார்தம் உடல் வருந்துமாறு செங்காந்தள் பூத்துகிடக்கின்றது' என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும். இதனை முடித்தற்கு ' உலகில் கொடிய தன்மையுடையார்க்குப், பிறர் வெதும்புமாறு செய்தலே இயல்பாம் ' என்ற உலகறி பொருளை ஏற்றி வைத்திருத்தலின்,
வேற்றுப்பொருள் வைப்பாயிற்று. தீயதன்மை வாய்ந்தார், பிறர்க்கு தீய தன்மையை விளைவித்தல் பொருந்திய இயல்பாதலின், இது கூடும் இயற்கை ஆயிற்று.
(7) இருமையியற்கை என்பது கூடாததனையும் கூடுவதனையும் ஒருங்கு கூறுவது.