பக்கம் எண் :
 
170தண்டியலங்காரம்

இனி , உவமவுருவகம் : 'வதனமதியம் உதய மதியமே யொக்கும்' என்றவழி , முன் குணப்பொருளை முக்கியப் பொருளோடு உருவகம் செய்து 'வதன மதியம்' என்றான் . பின்னர் முக்கியப் பொருளோடு உவமித்து 'உதய மதியமே யொக்கும்' என்றான் என்பது .

எனவே , முன்னர் உருவகஞ் செய்த அதனைப் பின்னரும் உவமிப்பது புனருத்தமாம் பிறவெனின் ; ஆகாது . அஃது ஒரு சொல்லுதல் வகைமையான் , முன்னர் இயல்பாகிய விளக்கமும் , கிளர்ச்சியும் நோக்கி முக்கியப் பொருளோடு குணப்பொருளை ஒற்றுமை கொளுத்தி உருவகஞ் செய்து , பின்னரும் , செயற்கையால் உளவாகிய மதர்ப்பும் செம்மையும் நோக்கி , 'மதுநுகர்ந்தார் முகம் உதயமதியம் போலும் ' என்று உவமித்தமையின் வேற்றுமை உடைத்தாதலால் உருவகத்துள்ளே அடக்கப்பட்டது . உவமைப்பாற் படுப்பினும் இஃது ஒக்கும் . புனருத்தம் - கூறியது கூறல் என்னும் குற்றம் .

'ஐயமும் ஒப்புமை யில்லதும் ' என்னாது , முறை பிறழக் கூறிய வதனான் , இவ்வோத்தின் ஒழிபுள்ளன தழீஇக் கொள்க என்பது . அவை இடத்திற்கேற்ற உவமையும் , காலத்திற்கேற்ற உவமையும் , பொருளிற்கேற்ற உவமையும் , பண்பிற்கேற்ற உவமையும் , சாதிக்கேற்ற உவமையும் , மரபிற்கேற்ற உவமையும் , பிறவாறும் பொருத்தமுடையன சிறப்புடையன எனக் கொள்க . ஒத்து - இயல் .

அவற்றுள் ,


1. இடத்துக்கேற்றது

எ-டு : 'பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுநீர் மொக்குள் '

- பொருந. 445

வி-ரை,இ-ள்: பருக்கைக் கற்களாகிய பகையாலே வருந்தின நோயோடு பொருந்தி, கற்றாழை பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்கள் என்பதாம் .

இது பாலைநில வருணனை பற்றியதாகும் . அந்நிலத்தில் நடப்பாருடைய காலில் ஏற்பட்ட கொப்புளங்களுக்கு . அந்நிலத்திலுள்ள கற்றாழைப் பழத்தை உவமை கூறினமையின் , இது இடத்திற்கேற்ற உவமையாயிற்று . மரல் - கற்றாழை .

2. காலத்துக்கேற்றது

எ-டு : 'நிழற்கோப மல்க ' என்பது .

வி-ரை: இச்செய்யுளையும் அதற்குரிய உரையையும் 50 - ஆம் பக்கத்திற் காண்க .

இச்செய்யுள் கார்கால வருணனை பற்றியது . ஆதலின் இதன்கண் அக்காலத்திற்கு உரிய இந்திரகோபப்பூச்சி , காயாமலர் , ஆடும்மயில் ஆகியவை கூறப்பட்டு , அவற்றிற்கேற்ப உவமையும் கூறப்பட்டிருத்தலின் , இது காலத்திற்கேற்ற உவமையாயிற்று .


3. பொருளுக்கேற்றது

எ-டு : 'கடலும் மலையும் போலக் கரியோய்' என்பது .