பக்கம் எண் :
 
232தண்டியலங்காரம்

மேலதற்கோர் சிறப்புவிதி

105. விரைவினும் சிறப்பினும் வரைவின் றதுவே.

எ - ன், மேலதற்கு ஓர் சிறப்பு விதி உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : மேல் ஒரு சொற்பொருள்மேல் பல சொல் வருதலன்றோ வழுவென்பது; அதுவே விரைவின்கண்ணும், சிறப்பின் கண்ணுமாயிற் குற்றமன்று எ - று.

அவற்றுள், விரைவின்கண்வந்தது

எ - டு :

'ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்துவட நாடர்
அருவர் அருவர்என அஞ்சி - வெருவந்து
தீத்தீத்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர்
போர்க்கலிங்க மீதெழுந்த போது'

இ - ள் : சோழனுடைய படைவீரர், போரையுடைய கலிங்க தேசத்தின் மீது சண்டைக்கு எழுந்தபோது, அவ்வடநாடர், ஒருவர்மேல் ஒருவர் வீழ்ந்து, 'நாம் குறைவுற்றவரானோம், குறைவுற்றவரானோம்' என்று பயந்து மயங்கி, 'நெருப்பு மூண்டது நெருப்பு மூண்டது' என்று வாடுவார்கள் எ - று.

(15)

இது - விரைவு. பிறவுமன்ன.

(4) கவர்படு பொருண்மொழி

106. ஒருபொருள் துணிய வுரைக்க லுற்றசொல்

இருபொருட்(கு) இயைவது கவர்படு பொருண்மொழி.

எ - ன், நிறுத்த முறையானே கவர்படு பொருண்மொழி என்னும் வழுவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : ஒரு பொருளைத் தெரிவுற உணர்த்தற்கு வந்த சொல், அதனையே ஐயுறும்படி பல பொருள்மேல் நிற்பது,கவர்படு பொருண்மொழி என்னும் குற்றமாம் எ - று.

எ - டு :

'புயலே புறம்பொதிந்து பூந்தா தொழுக்கி
மயலே கடவுளர்க்கு வாய்த்துச் - செயலை
எரிமருவு பூந்துணர்த்தாய் யாவரும்ஊ டாடார்
அரிமருவு சோலை யகத்து'

இ - ள் :மேற்புறம் மேகத்தால் மூடப்பட்டு, அழகிய மகரந்தங்களைச் சொரிந்து, தேவர்களுக்கும் மயக்கத்தை உண்டாக்கி, அசோகினது நெருப்பைப் போன்ற நிறம் பொருந்திய பூங்கொத்துக்களை யுடையதாய், அரி சார்ந்திருக்கின்ற சோலையினுள் எவரும் ஊடே செல்லார் எ - று. 

இதனுள் 'அரிமருவு சோலை யகத்து' என்றவழி, அரி என்பது - வண்டு, சிங்கம், நெருப்பு முதலிய பல பொருள்களுக்கும் பொதுவாதலான், ஒன்று துணியப்படாமையின் வழுவாயிற்று.

(16)

மேலதற்கோர் சிறப்புவிதி

107. வழூஉப்படல் இல்வழி வரைவின் றதுவே.

 எ - ன், மேலதற்கு ஓர் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.