பக்கம் எண் :
 
178இறையனார் அகப்பொருள்

     வேனிற் பருவங் குறித்துப் பிரிந்த தலைமகன் பிரிய வேறுபட்டாள்
தலைமகள்; வேறுபட, ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல்
என்பதுபடத் தலைமகள் சொல்லியதற்குச் செய்யுள்:


தலைமகள் தோழிக்குரைத்தல்


  ‘மெல்லிய லாய்நங்கண் மேல்வெய்ய வாய்விழி ஞத்துவென்ற
  மல்லியல் தோள்மன்னன் சென்னி நிலாவினன் வார்சடையோன்
  வில்லியல் காமனைச் சுட்டசெந் தீச்சுடர் விண்டவன்மேற்
  செல்லிய பாரித்த போன்றன பிண்டியின் தேமலரே.’          (286)

     எங்ஙனம் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லினாளோ எனின், ‘இவ்
வேனில் வரவின்கண் நம்மேல் இவ்வகை வெய்யவாகி விரியாநின்ற
பிண்டியலர் அவர்க்கும் இவ்வகை வெம்மையைச் செய்யுமன்றே,
செய்தவிடத்துத் தாம் எடுத்துக்கொண்ட பொருள் முடியாது மீள்வர்கொல்லோ
என ஆற்றேனாகின்றேன்’ என்றாள் என்பது.

     இச் சூத்திரம் தவளைப் பாய்ச்சல்.

   ‘வேந்தர்க் குற்றுழி’                        இறையனார் - 39)

என்னுஞ் சூத்திரத்துடன் நோக்குடைத்து என்பது.                     (8)


சூத்திரம்-42


     பரத்தையிற் பிரிவே நிலத்திரி பின்றே.

என்பது என்னுதலிற்றோ எனின் பரத்தையிற் பிரிவு நாடிடையிட்டு நீங்கி
உறைதல் இல்லையென்பது உணர்த்துதல் நுதலிற்று.

   மேற் சூத்திரத்துள் எய்தியது விலக்கியவாறு.

   இதன் பொருள்: பரத்தையிற் பிரிவே என்பது-பரத்தையர்மாட்டுப் பிரியும்
பிரிவு என்றவாறு; நிலத்திரிபு இன்றே என்பது-இடத்திரிபு இன்று என்றவாறு.

   என்பது இடத்தின் நீங்கி இயையப் பெறார் என்றவாறு.

   பரத்தையிற் பிரியுங்காலத்து நாடிடையிட்டும் காடிடையிட்டும் பிரியப்படாது
என்றவாறு.

எனவே, ஓரூரது என்பதூஉம், ஓரிடத்தது என்பதூஉம் உணர்த்தப்பட்டதாம்.