பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        233

     ‘தாழிரும் பிணர்த்தடக்கைத் தண்கவுள் இழிகடாத்துக்
     காழ்வரக் கதம்பேணாக் கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின்’.1

 எனவும்,

     ‘ஓங்குதிரை வியன்பரப்பின் ஒலிமுந்நீர் வரம்பாகத்
     தேன்தூங்கும் உயர்சிமய மலைநாறிய வியன்ஞாலத்து’2

 எனவும் கொள்க. பிறவும் அன்ன.

[நேரிசை வெண்பா]

     ‘அறமுதனான் கென்றும் அகமுதனான் கென்றும்
     திறனமைந்த செம்மைப் பொருண்மேல் - குறைவின்றிச்
     செய்யப் படுதலாற் செய்யுள்; செயிர்தீரப்
     பையத்தாம் பாவுதலாற் பா’.

 இதனைப் பிரித்துரைத்துக் கொள்க.

56) பாவினங்களின் பெயரும் வழங்கும் முறையும்

     தாழிசை துறையே விருத்தம் என்றிவை
     பாவினம் பாவொரு பாற்பட் டியலும்.

     ‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், நிறுத்த முறையானே பாவினங்களது
 பெயர் வேறுபாடும், அவற்றை வழங்கும் முறைமையும் உணர்த்துதல்
 நுதலிற்று.

     இதன் பொழிப்புரை: தாழிசையும் துறையும் விருத்தமும் என்றிம்
 மூன்றும் ‘பாவினம்’ எனப்படும். இவை பாவினோடும் கூடிப் பெயர் பெற்று
 நடக்கும் (என்றவாறு).

     பாவினோடும் கூடி வழங்குமாறு: வெண்டாழிசை, வெண்டுறை, வெளி
 விருத்தம் எனவும்; ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம்
 எனவும்; கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம் எனவும்; வஞ்சித்தாழிசை,
 வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் எனவும் இவ்வாறு வழங்கப்படும்.
 இவற்றுக்குச் செய்யுள், போக்கித் தத்தம் இலக்கணச் சூத்திரத்துள்ளே
 காட்டுதும்.

 பிறரும் பாவினங்கட்கு இவ்வாறே சொன்னார். என்னை?


     1 யா. வி. 31, 93, 94 உரைமேற். 2. பத்துப் மதுரைக். 1 - 4.