இதனுள் விடலையொடு மடந்தை நட்பு பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொண்டு நாலூர்க்கோசர் நன்மொழிபோல வாயாயிற்று எனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமையானும், விடலை எனப் பாலை நிலத்திற்குரிய தலைவன் பெயர் கூறினமையானும் கொடுப்போரின்றியும் கரணம் நிகழ்ந்தவாறு காண்க. |
நச் |
இஃது எய்தியதன் மேற் சிறப்பு விதி. |
இதன் பொருள்: கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே- முற்கூறிய கொடைக்குரிய மரபினோர் கொடுப்பக் கோடலன்றியுங் கரணம் உண்டாகும். புணர்ந்து உடன் போகிய காலையான-புணர்ந்து உடன் போகிய காலத்திடத்து என்றவாறு. |
இது புணர்ந்து உடன் போயினார் ஆண்டுக் கொடுப்போரின்றியும் வேள்வியாசான் காட்டிய சடங்கின் வழியாற் கற்புப்பூண்டு வருவதும் ஆமென்றவாறு. இனி ஆண்டு வரையாது மீண்டு வந்து கொடுப்பக்கோடல் உளதேல் அது மேற்கூறியதன்கண் அடங்கும். இனிப் போயவழிக் கற்புப்பூண்டலே கரணம் என்பாருமுளர். எனவே கற்பிற்குக் கரணம் ஒருதலையாயிற்று. |
“பறைபடப் பணிலமார்ப்ப விறைகொள்பு தொன்மூதாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழிபோல வாயாகின்றே தோழி யாய்கழற் செயலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தைநட்பே”1 |
(குறுந் -15) |
இதனுள் ‘வாயாகின்று’ எனச் செவிலி நற்றாய்க்குக் கூறியமையானும் ‘விடலை’ எனப் பாலை நிலத்துத் தலைவன் பெயர் கூறினமையானும் இது கொடுப்போரின்றிக் கரணம் நிகழ்ந்தது. ‘அருஞ்சுர மிறந்தவென் பெருந்தோட்குறுமகள்’ (அகம்-195) என்பதும் அது. |
1. பொருள் : பக்கம் 8ல் காண்க. |