பக்கம் எண் :
தொடக்கம்
அயலோராயினும் அதற்கு மேற்றே சூ.41285

சுரத்தினுமன்றித்   தம்   மனைக்கு   அயலே  பிரிந்தாராயினும்;   அகற்சி  மேற்று.  அதுவும்  பிரிவின்
கண்ணதாம் என்றவாறு.
  

எனவே     நற்றாய் தலைவியைத் தேர்ந்து  இல்லிற் கூறுவனவுஞ் சேரியிற் கூறுவனவும் பிரிந்தாரைப்
பின்  சென்றதேயாயிற்று.  இக்கருத்தான்    “ஏமப்பேரூர்” என்றார் இதனானே மனையயற்கட் பரத்தையிற்
பிரிவும் பாலையென்று உயர்த்துணர்க.
  

பாரதியார்
  

41. அயலோர்.....................மேற்றே
  

கருத்து:- இது, மேலதற்கோர் புறனடை கூறுகிறது.
  

பொருள்:-  அயலோராயினும் - உடன்போயவரைத்  தேடிச் சுரஞ்செல்லுஞ் செவிலித்தாயரன்றி, தமர்,
ஏவலர்  முதலிய  பிறரேயாயினும்;  அகற்சி  மேற்றே -   அவர் தேடுதல் அண்மைச் சேரியன்றி அகன்ற
சேய்மைச் சுரத்தின் கண்ணதேயாகும்.
  

குறிப்பு:-  மேற் சூத்திரத்தில்  சொல்லிய இரண்டனுள் தாயரே செல்லும் அண்மைச் சேரியை விளக்கிச்
சேய்மைச்  சுரத்திற்குத்  தாயரல்லாப்பிறர்    தேடிச்  செல்லுதல்  மரபு.  ஈற்றேகாரம்  தேற்றம். உம்மை,
செவிலியர் போல அயலோரும் சேண்சுரம்  செல்வரெனச் சுட்டலால் தழீஇய எச்ச உம்மையாம்.
  

இதற்குப்  பழைய உரைகாரர் - வேறு பொருள் கூறுவர். அது வருமாறு: அயலோராயினும் - முற்கூறிய
சேரியினும்  சுரத்தினுமன்றித்  தம்மனைக்கயலே     பிரிந்தாராயினும்;  அகற்சி மேற்றே-அதுவும் பிரிவின்
கண்ணதாம்  என  இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும்   உரை கூறுவர். மேற்சூத்திரம் கூறும் சேரியுஞ்
சுரமும்   காதலர்  பிரியுமிடம்  குறியாது;  உடன்போன   தலைமக்களைத்  தாய்மார்  தேடிச்  செல்லும்
இடத்தையே குறிக்குமாதலால். அங்குப் பிரியாமல் தம்மனை   அயலே பிரிதலை இச்சூத்திரம் கூறுவதாகக்
கொள்ளும்  அவ்விருவர்  உரையும்  பொருந்தாது.  அன்றியும்    மேற்சூத்திரம்  பாலையாம்  பிரிவைக்
குறிப்பதேயன்றி  பிரியாமல்  உடன்போன  தலைமகளை  அவள்   தாயர் தேடிச் செல்லுதலை மட்டுமே
குறிக்கும்  பிரிவையே  கருதாத  இச்சூத்திரம்  பிரியுமிடத்  தணிமை    குறிக்கும் எனல் எவ்வாற்றானும்
அமைவதன்றாம். அதனாலும் அவர் தம் உரை தொல்காப்பியர் கருத்தன்மை அறிக.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்