பக்கம் எண் :

252தொல்காப்பியம் - உரைவளம்
 

சிவ.
 

இது தலைவியின் குணச்சிறப்பு ஒன்று கூறுகின்றது.
 

இ-ள்   ஆராயும்   அறிவுடன்  மனையறம்  நிகழ்த்தும்  மனைக்கிழத்தியாகிய   தலைவிக்கும் தன்னை
ஒருகால்    தாய்போல்   தழீஇக்    கொண்ட   காமக்கிழத்தியைத்    தானும்   தலைவனைக்     கழறித்
தழுவிக்கொள்ளுதல்  உரியதாகும்  என்பர். எப்போதெனின் காமக்கிழத்தியானவள்   தலைவனை  முயங்கல்
வேண்டும் எனும் எண்ணத்தால் கலக்கமுற்றபோது என்க.
  

தலைவனை     முயங்கட்   பெறாமையால் காமக்கிழத்தி வருந்துவதைக் கண்டு, மனைக்கிழத்தியானவள்,
தான்  அவளினும்  வயதில்   முதிர்ந்தவளாதலினாலும்   புதல்வனையீன்றவளாதலினாலும் ஒரு  தாய்க்குரிய
அன்பு  இரக்கக்  குணங்களால்   தலைவனை இடித்துரைப்பாள் போல் கூறி  அவள்பால் இரக்கங்கொண்டு
அவளை ஏற்றுக் கோடல் உண்டு என்பதாம்.
 

கிழத்திக்கும்  என்ற  உம்மை   இறந்தது   தழீஇயது. ‘புல்லுதல்  மயக்கும்’  (10)  என்னும்  சூத்திரத்து
காமக்கிழத்தியின் கூற்று நிகழ் இடம் கூறியபோது
 

“காதற் சோர்வின் கடப்பாட் டாண்மையின்
தாய்போற் கழறித் தழீஇய மனைவியைக்
காய்வின் றவள்வயிற் பொருத்தற் கண்ணும்”

 

எனக் கூறியதைத் தழுவியது.
 

இதற்கு     உதாரணம்    “வயல் வெள்ளாம்பல்..... மகன் என்னாரே” (நற் 260) என்பது.  அப்பாடலில்
“ஊரன்  தொடர்பு  நீ  வெஃகினையாயின்”    என வருவது காமக்கிழத்தி தலைவன்  பரத்தையிற் பிரிந்து
நெடுங்காலம்  தன்னிடம்  வாராமையைக்    குறித்ததாகும். ‘அவனே புதுமலர் ஊதும்  வண்டென மொழிப
மகன் என்னார்’ என்றது தலைவனை இடித்துரைத்ததாகும்.
 

இளம்பூரணர்  அவ்வுதாரணப்   பாடலின் கீழ் “கவவொடு மயங்கிய  காலை என்பதற்குச் செய்யுள் வந்த
வழிக்  காண்க” என எழுதியது பொருந்தாது.   ‘ஊரன் தொடர்பு நீவெஃகினையாயின்’  என்பது ‘கவவொடு
மயங்கியது’ ஆகும்.
  

மனைக்கிழத்தியானவள்     காமக்கிழத்தியைத்   தாய்போல் தழீஇக்  கொண்டமைக்குக்  காட்டிய ‘வயல்
வெள்ளாம்பல்’ என்னும் நற்றிணைப் பாடலையே   காமக்கிழத்தியானவள்   மனைக்கிழத்தியைத்  தாய்போல்
தழீஇக் கோடலுக்கும் உதா