களவியல் என்ற
இறையனார் அகப்பொருள்
-----
1. களவு
சூத்திரம் - 1
அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்.
என்பது சூத்திரம்.
பாயிரம்
எந்நூல் உரைப்பினும் அந் நூற்குப்
பாயிரம் உரைத்து
உரைக்கற்பாற்று.
என்னை,
‘ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே’
என்பதாகலானும், ‘பருப்பொருட்டாகிய பாயிரங்கேட்டாற்கு
நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்’ என்பதாகலானும், பாயிரம்
உரைத்து 1உரைக்க என்பது மரபு. என்போலவோ எனின், ‘கொழுச்
சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமதுபோல’ என்பது.
பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம்
அப் பாயிரந்தான் இருவகைப்படும், பொதுப்பாயிரமும்
சிறப்புப்பாயிரமும் என. அவற்றுள் பொதுப்பாயிரம் என்பது எல்லா
நூல்முகத்தும் உரைக்கப்படுவது; சிறப்புப்பாயிரம் என்பது தன்னால்
2உரைக்கப்படும் நூற்கு இன்றியமையாதது.
(பாடம்) 1. உரைக்கவேண்டும். 2. உரைக்கின்ற.
|