110இறையனார் அகப்பொருள்

    ‘வெள்ளி விழுத்தொடி மென்கருப் புலக்கை
    வள்ளி நுண்ணிடை வயின்வயின் நுடங்க
    மீன்சினை அன்ன வெண்மணற் குவைஇக்
    காஞ்சி நீழல் தமர்வளம் பாடி
    ஊர்க்குறு மகளிர் குறுவழி1யிறந்த
    ஆரல் அருந்திய சிறுசிரல் மருதின்
    தாழ்சினை உறங்கும் தண்துறை ஊர
    விழையா உள்ளம் விழைவ தாயினும்
    கேட்டவை தோட்டி யாக2மீட்டாங்
    கறனும் பொருளும் வழாஅமை நாடித்
    தற்றக வுடைமை நோக்கி மற்றதன்
    பின்னா கும்மே முன்னியது முடித்தல்
    அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்
    அரிய பெரியோர்த் தேருங் காலை
    நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன
    பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
    மெய்யாண் டுளதோவிவ் வுலகத் தானே’           (அகம்-286)

      என, ‘யான் தனக்கு அவளை அடைக்கலமென்று கைப்பற்ற,
அதனைச் சூளுறவாகக் கருதித் திரியவுணர்ந்தாளாகலான் நீட்டிக்கல் ஆகாது’
எனப் பிற்றைஞான்று வரைவொடு புகுவானாம்.

      இனித், தெருளானாயின், ‘இரவுக்குறி வாரா வரைவல்’ என்னும்.
அதுகேட்ட தோழி இரவுக்குறியது ஏதங்காட்டி மறுக்கும். யாங்ஙனம்
மறுக்குமோ எனின், ‘அரவும் உருமும் புலியும் எண்கும்
வெண்கோட்டியானையும் என்று இவற்றது ஏதமுடைத்து; ஏற்றிழிவுடைத்தாய
அருவரையிடத்து ஒரு வேல் துணையாக நீர் ஆரிருள் நடுநாள்வரவு
ஆற்றுநீர்மையாளோ?’ என்னும். என்பதுகேட்ட தலைமகன்
ஆற்றுவானாயின், வரைந்து எய்தும்; ஆற்றானாயின் இறந்துபடும் எனக்
கருதி, இறந்து பாட்டு அச்சத்தினால் இரவுக்குறி நேரும்; நேர்ந்தாள்
தலைமகற்கு, ‘நின்னாட்டார் என்ன பூவினர்? என்ன சாந்தினர்? என்ன
மரத்தின்கீழ் விளையாடுப?’ என்னும். அது கேட்டுத் தலைமகன்,
‘முன்னெல்லாம் எனக்கு மறுத்தாளன்றே, மறுத்தாள் இது சொல்லிற்று ஒரு
காரணம் நோக்கி என உணர்ந்து, தானும், ‘நின்னாட்டார் என்ன பூவினர்?
என்ன சாந்தினர்? என்ன மரத்தின்கீழ் விளையாடுப?’ என்னும். என்றக்கால்
தோழி, ‘காந்தளும் வேங்கையும் சூடுதும், சந்தனச் சாந்து;

    
(பாடம்) 1. பிறழ்ந்த. 2. வேட்டாங்.