நூல்
இனிப், பாயிரம் 1உரைத்தபின்னர் நூல் உரைக்கற்பாலது.
அதுதான்
நான்குவகையான் உரைக்கப்படும்: அவை யாவையோ எனின், நூல் நுதலியது
உரைத்தலும், நூலுள் அதிகாரம் நுதலியது உரைத்தலும், அதிகாரத்துள் ஓத்து
நுதலியது உரைத்தலும், ஓத்தினுட் சூத்திரம் நுதலியது உரைத்தலும் என
இவை. அவற்றுள், நூல் நுதலியது உரைக்குமிடத்து, நூலாமாறும் நூல் என்ற
சொற்குப் பொருளாமாறும் உரைத்து உரைக்கற்பாற்று.
மூவகை நூலும் எதிர் நூலும்
அவற்றுள், நூல் ஆமாறு உரைக்குமிடத்து, நூல்தான் மூன்று
வகைப்படும். முதனூலும் வழிநூலும் சார்புநூலும் என:
என்னை,
‘முதல்வழி
சார்பென நூல்மூன் றாகும்’
என்றாராகலின்.
அவற்றுள், முதனூல் ஆவது-வரம்பில் அறிவன் பயந்ததாகும்:
என்னை,
‘வினையி
னீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதல்நூ லாகும்’
(மரபியல், 91)
எனவும்,
முதல்வன் நூற்குப் பிறன்கோட்
கூறாது’
எனவும்,
‘தந்திரஞ்
சூத்திரம் விருத்தி மூன்றற்கு
முந்நூல் இல்லது முதல்நூ லாகும்’
எனவும் சொன்னாராகலின்.
இனி, அந்நூலோடு ஒத்த மரபிற்றாய் ஆசிரியமத விகற்பம் படக் கிளப்பது
வழிநூல் எனப்படும்.
என்னை,
‘முன்னோர்
நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும்
விகற்பங் கூறி
அழியா மரபினது
வழிநூ லாகும்’
என்றாராகலின்.
(பாடம்) 1. உரைத்த பின்றை நூலாமாறும்.
|