முற்படுத்து உடன்போக்க மாட்சிப்படும்; படுத்து, ஓம்படை சொல்லும்;
அதற்குச் செய்யுள்:
ஓம்படுத்துரைத்தல்
‘கொங்கை தளரினும் கூந்தல் நரைப்பினும் ஏந்தல்மற்றிவ்
அங்கை அடைக்கலம் என்றே கருதி அருள்கண்டாய்
கங்கை மணாளன் களிமத னன்கடி மாமணற்றி
மங்கை அமரட்ட கோன்வையை நாடன்ன மாதரையே.’
(178)
‘மென்முலை வீழினும் கூந்தல் நரைப்பினும் விண்ணுரிஞ்சு
நன்மலை நாட இகழல்கண் டாய்நறை யாற்றில்வென்ற
வின்மலி தானை நெடுந்தேர் விசாரிதன் வேந்தர்பெம்மான்
கொன்மலி வேல்நெடுங் கண்ணிணைப் பேதைக் கொடியினையே.’
(179)
‘அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர
இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.‘
(நற்றிணை, 10)
‘பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறும் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே.’
(குறுந்-115)
‘நனைமுதிர் ஞாழல் சினைமருள் திரள்வீ
நெய்தல் மாமலர்ப் பெய்த போல
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப
தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட்டு
அன்னா யென்னும் குழவி போல
இன்னா செய்யினும் இனிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பினளென் தோழி
தன்னுறு விழுமம் களைஞரோ இலளே.’
(குறுந்-397)
|