இறையனார் அகப்பொருள் - களவு 141
 

றானும் அங்ஙனம் தமர்மறுத்தார் என்பதனைத் தலைமகள் கேட்ட ஞான்றும்
ஆற்றாளாம். என்னை, ‘நம்பெருமான் ஒருவர்க்கு ஒரு குறை முடிப்பினல்லது
ஒருவரை ஒரு குறை வேண்டுந் தன்மையன் அல்லன்; அல்லாதான் இக்குறை
வேண்டியது என்கண் கிடந்த அருளாகாதே! இவற்கு இவ்விளிவரவு
ஆக்கினேன் பாவியேன்!’ எனவும், ‘எம்பெருமாற்கு மறுத்தார், இனி
மற்றொருவாறாகாதே!’ எனவும் தலைமகள் வேறுபடும்; அவ் வேறுபாடு
தோழிக்குப் புலனாம்; புலனாயினவிடத்து மேற்சொல்லியவாறே அறத்தொடு
நிற்கும் என்பது.

     ‘அவன் ஊறு அஞ்சுங் காலம் ஆயினும்’ என்பது - தலைமகன்
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற நிலைமைக்கண் ‘எம்பெருமான் வரும்வழி,
எண்கும் வெண்கோட்டியானையும் அரவும் உருமும் புலியும் வரையரமகளிரும்
வானரமகளிரும் உடைத்து, மற்றும் தெய்வங்கள் வௌவும் வண்ணத்தன, ஏதம்
நிகழ்வது கொல்லோ!’ என வேறுபடும். அவ் வேறுபாடு தோழிக்குப் புலனாம்;
புலனாயினவிடத்து மேற்சொல்லியவாறே அறத்தொடு நிற்கும் என்பது.

     ‘அந்நாலிடத்தும்’ என்பது - அச் சொல்லப்பட்ட நான்கு இடத்தும்
என்றவாறு.

     ‘மெய் நாண் ஒரீஇ’ என்பது - மெய்க்கண் நின்ற நாண் நீங்கி
என்றவாறு; நாண் உண்டாயினவிடத்துத் தாய்முன் நின்று சொல்லாள் என்பது.

      ‘அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே’ என்பது - அறம் என்பது
தக்கது; தக்கதனைச் சொல்லிநிற்றல் தோழிக்கும் உரித்து என்றவாறு;
அல்லதூஉம், பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு, கற்பின் தலைநிற்றல்
என்பதூஉமாம்.

      ‘இனித், தோழிக்கும் உரித்து’ என்ற உம்மையால், தலைமகட்கும்
அறத்தொடுநிலை உரித்து என்பது. அஃதாமாறு: இயற்கைப் புணர்ச்சி
புணர்ந்தானும், பாங்கற்கூட்டம் கூடியானும் தெருண்டு வரைந்தெய்தலுற்றுத்
தமரை விடும்; விட்டவிடத்து அவர் மறுப்பர், அஃது இலக்கணமாகலான்.
அங்ஙனம் மறுத்தவிடத்துத் தலைமகள் வேறுபடும். ‘எம்பெருமான்
மறுக்கப்பட்டமையான் மற்றொரு வாறாங்கொல்லோ!’ எனக் கலங்கி வேறுபடும்;
வேறுபாடு எய்தினபொழுதே தோழிக்குப் புலனாம்; புலனாயினவிடத்து,
‘எம்பெருமாட்டி, நினக்கு இவ் வேறுபாடு எற்றினானாயிற்று?’ என்னும்.
என்றவிடத்து, ‘‘இஃது எனக்குப்பட்டது. இன்னவிடத்து ஒரு ஞான்று நீயும்ஆய