144இறையனார் அகப்பொருள்

என்றவாறு; வரைதல் வேட்கைப் பொருள என்ப என்பது - வரைதல் வேட்டுச் சொல்லுஞ்சொல் என்றவாறு.


                  
காமமிக்க கழிபடர்கிளவி


      ‘இனிக், ‘காமமிக்க கழிபடர் கிளவி’ யாமாறு;
பகற்குறியானும் இரவுக்குறியானும் தலைமகன் ஒழுகாநின்ற நிலைமைக்கண் ஒருநாள் ஒருகாற் கண்டு தரிக்குந் தன்மைத்தன்றாம் வேட்கை; என்னை, காணும் பொழுதிற் காணாப்பொழுது பெரிதாகலான்; அவ்வகை வேட்கையளாய் நின்று புன்னைக்கானும் அன்னத்திற்கானும் கடலிற்கானும் கழிக்கானும் அவ்வகை பிறவற்றிற்கானும்1 தன்கட்பொறை தணிப்பனவாகச் சிந்தித்துச் சொல்லுவதாயிற்று; அதற்குச் செய்யுள்:


 
‘தாதலர் நீள்முடித் தார்மன்னன் மாறன்தண் ணங்குமரிப்
  போதலர் கானற் புணர்குறி வாய்த்தாள் புலம்பிநைய
  ஏதலர் நோய்செய்வ தோநின் பெருமை எனநெருங்கிக்
  காதலர் தம்மைக் கழறினென் ஊனங் கருங்கடலே.’          (213)


  ‘ஒண்தூவி நாராய்நின் சேவலும் நீயுமாய்
  வண்டூது பூங்கானல் வைகலும் சேறிரால்
  பெண்தூது வந்தேம் எனவுரைத்தெம் காதலரைக்
  கண்டீர் கழறியக்கால் கானல் கடிபவோ.’


      இவை கடலுக்கும் நாரைக்கும் சொல்லிய எனக்கொள்க.

 
      இதனைத் தலைமகன் கேளா வருமேயெனின், ‘இங்ஙனம் வந்தொழுக இவள் ஆற்றாளாம்’ என்று ஒருவகையான் முற்பட்டுப் பிற்றைஞான்று வரைவொடு புகுவானாம்; தோழி கேட்குமே யெனின், தலைமகனை முன்னின்று வரைகடாவாளாம்; யாருங் கேட்பாரில்லை யெனின், ஆற்றுதலைப் பயக்கும். என்னை, மூடிவேவாநின்றதோர் கலத்தை மூடி்திறந்தவிடத்து அகத்துநின்ற வெப்பங் குறைபடும்; அதுபோல, இவட்கும் அயர்வுயிர்ப்பாம், அச் சொற்கள் புறப்படுதலான் என்பது. இம்மூன்றினுள் ஒன்றாகாமையில்லை யென்பது. தலைமகன் கேட்பின் இன்னதொன்றாம், தோழிகேட்பின் இன்னதொன்றாம், யாருங் கேட்பாரில்லையாயின் இன்னதொன்றாம் என்று ஒரு பயன் சிந்தித்துச் சொல்லுமோ எனிற், சொல்லாள்; குழவி அழுதாற்போல வேட்கை மிகுதியாற் சொல்லினவிடத்து அப் பயன் நிகழும். குழவி அழுகின்றது, ‘எனக்குப் பால் தம்மின்; நீர் ஆட்டுமின்’ என்றழாது, துக்கம் வந்ததாக அழும்; அழ, அறிவார் பயம் எய்துவிப்பர் என்பது.


   (பாடம்) 1. தன்கட்டுறு குறை.