இறையனார் அகப்பொருள் - களவு 147
 

என்பது குறிப்பின்றியே தோன்றும் நடுக்கம்; கிளவி என்பது சொல்;
அஃதாமாறு, தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகா நின்ற நிலைமைக்கண்,
எம்பெருமான் வரும்வழி இறப்பவும் இன்னாது, நீருடைத்து கல்லுடைத்து
முள்ளுடைத்து ஏற்றுடைத்து இழிவுடைத்து எனக் கவறல்; இஃதாம்
ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி யென்ப ஒரு திறத்தார்; அவரறியார், இஃது
ஆறுபார்த்துற்ற கிளவியே. இனி, அச்சக்கிளவி யென்பது, கள்ளருடைத்து,
புலியுடைத்து, எண்குடைத்து, வெண்கோட்டியானை யுடைத்து உருமுடைத்து,
பாந்தளுடைத்து எனக் கவலுங் கவற்சியாற் சொல்லுவது. அவற்றுள்,

    ஆறு பார்த்துற்றதற்குச் செய்யுள்:

 
‘உருள்தங்கு மாநெடுந் திண்தேர் உசிதன் உலகளிக்கும்
  அருள்தங்கு செங்கோல் அடல்மன்னன் கொல்லி அருவரைவாய்
  மருள் தங்கு வண்டறை சோலைப் பொதும்பின் வழங்கற்கின்னா
  இருள் தங்கு நீள்நெறி எம்பொருட் டால்வந் தியங்கல்மினே.’ (220)
 

    இது கேட்ட தலைமகன் வரைவானாம்.
 

    இனி, அச்சக்கிளவிக்குச் செய்யுள்:

  ‘பண்குடை சொல்லிவள் காரண மாப்பனி முத்திலங்கும்
  வெண்குடை வேந்தன் விசாரிதன் மேற்கரை யேற்றெதிர்ந்தார்
  புண்குடை வேல்மன்னன் தென்னன் பொதியில் புனவரைவாய்
  எண்குடை நீள்வரை நீயரை எல்லி இயங்கல்மினே.’         (221)

  ‘அன்பெதிர்ந் தாலும் வருதல்பொல் லாதைய ஆரமருள்
  முன்பெதிர்ந் தார்படச் சேவைவென் றான்முகில் தோய்பொதியில்
  பொன்பிதிர்ந் தாலன்ன மின்மினி சூழ்புற்றின் முற்றியசோற்
  றின்பிதிர் வாங்கியெண் கேறு திளைத்துண்ணும் ஈண்டிருளே.’ (222)

   இன்னும் அவற்றிற்குச் செய்யுள்:

 
‘கையமை வேல்விளக் காகக் கனையிருள் நள்ளிரவின்
  ஐயமை தோய்வெற்ப வாரல் நறையாற் றமர்கடந்திவ்
  வையமெல் லாங்கொண்ட மன்னவன் மாறன்மை தோய்பொதியில்
  தெய்வமெல் லாமரு விப்பிரி யாத சிறுநெறியே.’            (223)

  ‘தோள்வாய் மணிநிற மங்கைக்கு வாட்டமுந் துன்னுதற்கே
  நாள்வாய் வருதிவிண் தோல்சிலம் பாநறை யாற்றுநண்ணார்
  வாள்வாய் உகச்செற்ற வானவன் மாறன்மை தோய்பொதியில்
  கோள்வாய் இளஞ்சிங்கம் நீங்கா திரிதரும் குன்றகமே.’      (224)

  ‘காந்தள் முகையன்ன மென்விரல் ஏழைதன் காரணமாப்
  பூந்தண் சிலம்ப இரவின் வருதல்பொல் லாதுகொலாம்
  வேந்தன் விசாரிதன் விண்தோய் குடுமிப் பொதியிலென்றும்
  தேந்தண் சிலம்பின் அரிமா திரிதரும் தீநெறியே.’          (225)