என்னை,
‘அறநிலை
யொப்பே பொருள்கோள் தெய்வம்
யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே
இராக்கதம் பேய்நிலை யென்றிக் கூறிய
மறையோர் மன்ற லெட்டவை அவற்றுள்
துறையமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பிதன்1
பொருண்மை யென்மனார் புலமை யோரே’
என்பதன் பொருளென்று உணர்வது.
பிரமம் என்பது
- நாற்பத் தெட்டியாண்டு பிரமசரியங்
காத்தாற்குப் பன்னீராட்டைப் பிராயத்தாளை அணிகலன் அணிந்து
கொடுப்பது. கொடாவிடின், ஓர் இருதுக்காட்சி ஒருவனைச் சாராது
கழிந்தவிடத்து ஒரு பார்ப்பனக் கொலையோடு ஒக்கும் என்பது; இதனை
அறநிலை என்றுணர்வது.
பிரசாபத்தியம் என்பது
- மைத்துன கோத்திரத்தான் மகள்
வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது; 2இதனை ஒப்பு என்று உணர்வது.
ஆரிடம் என்பது
- ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப்
பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நீரிற் கொடுப்பது; இதனைப்
பொருள்கோள் என உணர்வது.
தெய்வம் என்பது
- வேள்வி ஆசிரியர்க்கு வேள்வித்தீமுன்
வைத்துக் கொடுப்பது, இதனைத் தெய்வம் என்று வழிபடப்பட்டது.
காந்தர்வம் என்பது
- இருவர் ஒத்தார் தாமே கூடுங்கூட்டம்;
இதனை யாழோர் கூட்டம் என்று உணர்வது.
அசுரம் என்பது
- கொல்லேறு கொண்டான் இவளை எய்தும்,
வில்லேற்றினான் இவளை எய்தும், திரிபன்றி எய்தான் இவளை எய்தும்,
மாலை சூட்டப்பட்டான் இவளை எய்தும் என இவ்வாறு சொல்லிக்
கொடுப்பது, இஃது அரும்பொருள் வினைநிலை என்பது.
இராக்கதம் என்பது
- அவள் தன்னினுந் தமரினும் பெறாது
வலிந்து கொள்வது.
பைசாசம் என்பது
- மூத்தாள் மாட்டும் துயின்றாள்மாட்டும்
களித்தாள் மாட்டும் சார்வது; இது பேய்நிலை எனப்படும்.
(பாடம்) 1. புலமையோர் புணர்ப்பிதன். 2. அதனை ஒப்பென்பது.
|