இறையனார் அகப்பொருள் - களவு 29
 

என்போலவோ எனின்-உருளரிசி, கொத்தமூரி என்றாற் போல எனின், அது
பொருந்தாது; என்னை காரணம் எனின், கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும்
எனவே வேற்றுமை யின்மை முடிந்தது, அவர் வேற்றுமை யிலராகலின்;
இன்னும் ஒருகால் வாசகம் வேறுபடுத்து அப்பொருளே சொல்லப்
புனருத்தமாம்; என்னை, ஒரு பொருளை வேறுபட்ட வாய்பாட்டாற் பல்காற்
சொல்லுவது புனருத்தமாகலின்.

      இனி, ஒருவன் சொல்வது இவனும் பற்பன்னூறாயிரவர் கூர்வேல்
இளைஞரொடு திரி தரினன்றித் 1தமியனாதல் இலன், பெரியனாதலால்; இவளும்
பற்பனனூறாயிரவர் ஆயமகளிர் புடை சூழத்திரிதரினன்றித் 2தமியளாதல்
இலள், பெரியளாதலால். இங்ஙனம் இல்லாதான், இவனும் இளைஞரினீங்கித்
தானேயாய், இவளும் ஆயத்தின் நீங்கித் தானேயாய், இங்ஙனம் புணர்வர்

காடற்குத், ‘தானே அவளே’ என்று சொல்லப்பட்டது என்னும் இவ்வுரையும்
பொருந்தாது. என்னோ காரணம் எனின், கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும்
எனவே, தமியராய்ப் புணர்தல் முடிந்தது; இன்னும் ஒருகால் அப்பொருளையே
சால்லப் புனருத்தமாம் என்பது.

      மற்று என்னோ உரையெனின், தானே அவளே என்பது,
ஆண்பால்களுள் இவனோடு ஒத்தாரும் இல்லை, மிக்காரும் இல்லை,
குறைபட்டார் அல்லது; எக்காலத்தும் எவ்விடத்தும் ஞானத்தானும்
குணத்தானும் உருவினானும் திருவினானும் பொருவிலன்தானே என்பது;
இவளும் அன்னள் எனவே, இருவரும் பொருவிறந்தார் என்பதனைப் பயக்கும்.

      நின்ற ஏகாரம், ஐந்து ஏகாரத்துள்ளும் என்ன ஏகாரமோ எனின்,
ஆண்குழுவின் இவனையே பிரித்து வாங்கினமையானும், பெண்குழுவின்
இவளையே பிரித்து வாங்கினமையானும் பிரிநிலை ஏகாரம் எனப்பட்டது;
பலவற்றுள் ஒன்று பிரிப்பது பிரிநிலை ஏகாரம் எனப்படும் ஆகலான் என்பது.

      அஃதேயெனின், கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும் எனவே,
எத்திறத்தானுங் குறைபாடு இன்மை முடியாதோ எனின், முடியாது;
கந்தருவர்க்கும் ஞானக் குறைபாடும் தருமக்குறைபாடும் ஆள்வினைக்
குறைபாடும் உண்டு. இச் சொல்லப்பட்டன சிறிதே யென்றே ஒப்பித்து,
பொருவிறப்புச் சூத்திரத்தாற் சொல்லவேண்டும் என்பது.

   
(பாடம்) 1. தனியனாதல். 2. தனியளாதல்.