32இறையனார் அகப்பொருள்

என்றும், மயிலொடு மாறாடுதும் என்றும், குயிலொடு மாறுகூவுதும் என்றும்,
அருவியாடி அஞ்சுனை குடைதும் என்றும், வாசமலர்க்கொடியில்
ஊசலாடுதும் என்றும் பரந்து, அப்பாலுள்ளார் இப்பாலுள்ளாள்கொல்லோ
என்றும், இப்பாலுள்ளார் அப்பாலுள்ளாள் கொல்லோ என்றும் இவ்வகை
நினைத்துப் பிரிப என்பது.

       இவ்வகை அவளைத் தமியளாய்ப் பிரிபவோ எனின், எட்டியுஞ்
சுட்டியுங் காட்டப்படும் குலத்தள் அல்லளாகலானும் பான்மை
அவ்வகைத்தாகலானும் பிறவாறு நினையார் பிரிப என்பது. ஆயின்,
இவ்வகைப்பட்ட ஆயத்திடை மேனாள் பிரிந்து பயின்றறியாதாள் தமியளாய்
நிற்குமோ எனின், நிற்கும்; தான் பயின்ற இடம் தன் ஆயத்தினோடு ஒக்கும்
ஆகலான் என்பது.
 
       யாங்ஙனம் நிற்குமோ எனின், சந்தனமும் சண்பகமும் தேமாவும்
தீம்பலவும் ஆசினியும் அசோகும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து,
நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலோடு
மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவைஞாழலும் பைங்கொன்றையும்
பிணியவிழ்ந்து, பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகைசிறந்து,
வண்டறைந்து தேனார்ந்து வரிக்குயில்கள் இசைபாட, தண்தென்றல்
இடைவிராய்த் தனியவரை முனிவுசெய்யும் பொழிலது நடுவண் ஒரு
மாணிக்கச் செய்குன்றின்மேல், விசும்பு துடைத்து, பசும்பொன் பூத்து, வண்டு
துவைப்பத் தண்தேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்;
கண்டு, பெரியதோர் காதல் களிகூர்ந்து, தன் செம்மலர்ச் சீறடிமேற் சிலம்பு
கிடந்து சிலம்புபுடைப்ப, அம் மலர் அணிக்கொம்பர் நடை கற்பதென நடந்து
சென்று, நறைவிரி வேங்கை நாண்மலர் கொய்தாள்; கொய்தவிடத்து,
மரகதமணி விளிம்பு அடுத்த மாணிக்கச் சுனை மருங்கினதோர் மாதவிவல்லி
மண்டபத்துப், போது வேய்ந்த பூநாறு கொழுநிழற்கீழ்க் கடிக்குருக்கத்திக்
கொடி பிடித்துத் தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முகடு தொடுத்து வந்து
இழிதரும் அருவி, பொன் கொழித்து, மணி வரன்றி, மாணிக்கத்தொடு வயிரம்
உந்தி, அணிகிளர் அருவி ஆடகப் பாறைமேல் அதிர்குரல் முரசின்
கண்ணிரட்ட, வண்டும் தேனும் யாழ்முரல, வரிக்குயில்கள் இசைபாடத், தண்
தாது தவிசுபடப் போர்த்ததோர் பளிக்குப் பாறை மணித்தலத்துமிசை, நீல
ஆலவட்டம் விரித்தாற்போலத் தன் கோலக் கலாவம் கொளவிரித்து,
முளையிளஞாயிறு இளவெயில் எறிப்ப, ஓர் இளமயில் ஆடுவது நோக்கி
நின்றாள்.