இறையனார் அகப்பொருள் - களவு 33
 

 

       அப்பால், தலைமகனும் பற்பல் நூறாயிரவர் கூர்வேலிளையரொடு
குளிர்மலைச்சாரல் வேட்டம் போய் விளையாடுகின்றான், ஆண்டு
எழுந்ததோர் கடுமாவின்பின் ஓடிக், காவல் இளையரைக் கையகன்று,
நெடுமான்தேரொடு பாகனை நிலவுமணற் கானியாற்று நிற்கப் பணித்துத்,
தொடுகழல் அடியதிரச் சுருளிருங் குஞ்சி பொன்ஞாணிற் பிணித்துக், கடிகமழ்
நறுங்கண்ணிமேல் கொண்டு வண்டு மணனயர, அஞ்சாந்தின் நறு நாற்றம்
அகன் பொழிலிடைப் பரந்து நாற, அடுசிலையொடு கணை ஏந்தி, வடிவு
கொண்ட காமன்போலச் சென்று, அவள் நின்ற இரும்பொழில் புகும்.
அஃதியாங்ஙனமோ எனின், வடகடலிட்ட ஒரு நுகம் ஒருதுளை,
தென்கடலிட்ட ஒருகழி சென்று கோத்தாற்போலவும், வெங்கதிர்க் கனலியும்
தண்கதிர் மதியமும் தம்கதிவழுவித்தலைப்பெய்தாற் போலவும் தலைப்பெய்து,
ஒருவர் ஒருவரைக் காண்டல் நிமித்தமாகத் தமியர் ஆவர்.

                 
தலைமகன் குணம் நான்கு

       தமியராதல் என்பது, தம் உணர்வினர் அல்லராதல். தம்
உணர்வினர் அல்லராதல் என்பது என்னோ எனின், தலைமகற்கு அறிவு,
நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன குணம்.

   அறிவு என்னோ எனின்,

     
 ‘எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு
’ [குறள் - 355]


என்றாராகலின், எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று
அம்மெய்ம்மையை உணர்வது அறிவு.

      நிறை என்பது என்னோ எனின், காப்பன காத்துக் கடிவன கடிந்து
ஒழுகும் ஒழுக்கம்.

      ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பது.
கடைப்பிடி என்பது கொண்டபொருள் மறவாமை.

      இந்நான்கையும் தலைமகற்கு வேட்கையான் மீதூரப்பட்டுப், புனல்
ஓடுவழிப்   புற்சாய்ந்தாற்போலச் சாய்ந்து கிடப்பது.

                
தலைமகள் குணம் நான்கு

       இனித் தலைமகட்கு நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன குணம்;
அவற்றுள்,