உள்ளம் ஓடினவழி ஓடுவித்தல் தக்கதன்று என்பதனால் அதுவும்
மாறுகொள்ளும் என்பது.
மற்று என்னையோ உரைக்குமாறு எனின், அவர் தம்முள் மெய்யுற்றுப்
புணர்ந்திலர், இருவர்தம் காமமுமே தம்முட் புணர்ந்தன என்று, இங்ஙனம்
உள்ளங்களானின்று புணர்வது புணர்ச்சி; இது பிறரொருவர் உணர
நெடுங்காலம் புணர்தலாகாது என நீங்கும் நீக்கம் பிரிவு; அப் பிரிவின்கட்
சொல்லுவது மெய்யுறுபுணர்ச்சிக்குச் சொல்லுவன எல்லாஞ் சொல்லவே
அமையும். பாங்கற் கூட்டத்தின்கண்ணும் தோழியிற் கூட்டத்தின்கண்ணும்
எல்லாம் அதுவே.
வரைந்து எய்திய ஞான்று மெய்யுறு புணர்ச்சி உண்டாவது என்ப.
களவுப்புணர்ச்சி - மெய்யுறுபுணர்ச்சி
அது பொருந்தாது என்று மெய்யுறுபுணர்ச்சி வேண்டுவார் சொல்லுவது;
மெய்யுறுபுணர்ச்சி தக்கின்று என்று ஆகாதே உள்ளப்புணர்ச்சி வேண்டியது;
அங்ஙனங் கருதின், பிறர்க்கு உரிய பொருண்மேல் உள்ளத்தை ஓடவிடுதல்
தக்கின்று என்று மீட்க அமையாதோ என்பது. அல்லதூஉம், உள்ளத்தான்
வேட்கை செல்லினும் மெய்யுற்றார் ஆயிற்று. அதன்கண் இருபுடை கருதி
ஆகாதே; ஆகவே இவட்குக் கற்பழியும் பிறரொருவரை வழிபட. இனி,
உள்ளஞ் சென்ற பொழுதே அமைந்து இரண்டாவதில்லை என்று கருதினானே
எனினும் மெய்யுறவே; குற்றம் என்னோ என்பது அல்லதூஉம், மெய்யும்
மொழியும் என்பன உள்ளத்தின் வழியவன்றே, அஃது இறந்தபின்னை இறவாது
நின்றது என்னோ என்பது. அல்லதூஉம், பார்ப்பான் பாதகமாயிற்றொன்று
நினைக்குமாயின் பிராய்ச்சித்தத்திற்கு உரியனாம்; அதனாற் செய்கையும்
நினைப்பும் ஒக்கும் என்பது. அல்லதூஉம், மெய்யுறுவது ஆகாது என்னுந்
தெரிந்துணர்ச்சி உண்டாயின் தமியர் என்பதனொடு மாறுகொள்ளும் என்பது.
அல்லதூஉம், கந்தருவர் உள்ளத்தாற் புணர்ந்தாராயின், இவரும்
உள்ளத்தாற் புணர்ப என்பது; என்னை, கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும்
என்றமையின் என்பது. அல்லதூஉம் தெரிந்துணர்வு உண்டாமே எனின்,
அன்பினான் நிறைந்தார் என்பது அமையாது; என்னை, நிறைந்திருந்ததோர்
கொள்கலம் பிறிது ஒன்றற்கு இடங் கொடாததுபோல என்பது. இவர்
உத்தமராகலான் உள்ளத்தானே புணரப் போகம் முடியும் |