36இறையனார் அகப்பொருள்

எனின், பின்னையும் எஞ்ஞான்றும் மெய்யுறவுவகை கூடாதாம்.
புத்திரலாபத்திற்கு மெய்யுறுபவே எனின், கருமப்பொருட்டன்றி
வேட்கையில்லை என்பதனால், உள்ளப்புணர்ச்சி உரையன்று,
மெய்யுறுபுணர்ச்சியே வேண்டும் என்பது.

                    
சொற்பாடு

       இனி, ஒரு சாரார் உரைக்குமாறு; மெய்யுறுபுணர்ச்சி தக்கது,
இன்சொல்லும் கூற்றும் இன்றிப் பசுப்போலப் புணர்ந்தார் என்பது தகாது,
சொற்படுகால் முறைமையான் நிகழ்ந்து புணர்தல் தகவுடைத்து அவை
யாவையோ எனின்-காட்சி, ஐயம், தெளிதல் தேறல் என இவை. அவற்றுள்,

      
காட்சி என்பது-இருவரும் தம்முட் கண்ணுறுவது. அதற்குச்
செய்யுள்:

  
 ‘பூமரு கண்ணிணை வண்டாப் புணர்மென் முலைஅரும்பாத்
    தேமரு செவ்வாய் தளிராச் செருச்செந் நிலத்தைவென்ற
    மாமரு தானையெங் கோன்வையை வார்பொழி லேர்கலந்த
    காமரு பூங்கொடி கண்டே களித்தஎம் கண்ணிணையே
.’ (1)


      
ஐயம் என்பது-கண்ணுற்ற பின்னை ஐயப்படுவது. எங்ஙனமோ
எனின், வரையரமகள்கொல்லோ, வானரமகள் கொல்லோ,
நீரரமகள்கொல்லோ இத்துணை மேதகவுடையாள்! அன்றி,
மக்களுள்ளாளகொல்லோ! என்றும் ஐயப்படுவது. அதற்குச் செய்யுள்:
 

    உரையுறை தீந்தமிழ் வேந்தன் உசிதன்தென் நாட்டொளிசேர்

    விரையுறை பூம்பொழின் மேலுறை தெய்வங்கொ லன்றிவிண்தோய்
    வரையுறை தெய்வங்கொல் வானுறை தெய்வங்கொல் நீர்மணந்த
    திரையுறை தெய்வங்கொல் ஐயந் தருமித் திருநுதலே.
’ (2)

     
இவளும் அவனை ஐயப்படும். கடம்பமர் கடவுள் கொல்லோ,
இயக்கன்கொல்லோ! அன்றி, மக்களுள்ளான்கொல்லோ என்று இங்ஙனம்
ஐயப்படும்.

      இவ்வகை நினைந்தபின்னைத்
தெளிவு வருமாறு: ஆடை
மாசுண்டலானும், கால் நிலந்தோய்தலானும், கண் இமைத்தலானும், கண்ணி
வாடுதலானும், சாந்து புலர்தலானும் என்று இங்ஙனந் தெரியும்; தெரிந்த
பின்னைத் துணியும் என்பது. அதற்குச் செய்யுள்:

  
பாவடி யானைப் பராங்குசன் பாழிப் பகைதணித்த
   தூவடி வேல்மன்னன் கன்னித் துறைச்சுரும் பார்குவளைப்
   பூவடி வாள்நெடுங் கண்ணும் இமைத்தன பூமிதன்மேற்
   சேவடி தோய்வகண் டேன்தெய்வ மல்லளிச் சேயிழையே
.’ (3)