இறையனார் அகப்பொருள் - களவு 49
 

நோக்குவான், புதையிருள் இரியல்போகப் பொன்தாழ் அருவிமணி நெடுங்கோட்டு உதயம் என்னும் மணிவரை யுச்சி உலகு துயில் பெயர்த்துத் தோன்றிய வளர் ஒளி இள ஞாயிற்றின் வனப்பு ஒழித்த திருவொளி மழுங்கியது நோக்கி, ‘என்னை கொல்லோ எம்பெருமாற்கு இற்றை வேறுபாட்டு வாட்டம்?’ என்னும். அதற்குச் செய்யுள்:


 
  ‘நீடிய பூந்தண் கழனிநெல் வேலி நிகர்மலைந்தார்
    ஓடிய வாறுகண் டொண்சுடர் வைவே லுறைசெறித்த
    ஆடியல் யானை யரிகே சரிதெவ்வர் போலழுங்கி
    வாடிய காரண மென்னை கொல் லோவுள்ளம் வள்ளலுக்கே
.’ (22)


    ‘வண்டுறை வார்பொழில் சூழ்நறை யாற்றுடின் ஓடவைவேல்
    கொண்டுறை நீக்கிய தென்னவன் கூடற் கொழுந்தமிழின்
    ஒண்துறை மேலுள்ள மோடிய தோஅன்றி யுற்றதுண்டோ
    தண்துறை வாசிந்தை வாடிட என்னீ தளர்கின்றதே
.’        (23)


    ‘தெவ்வா யெதிர்நின்ற சேரலர் கோனைச் செருக்கழித்துக்
    கைவானி தியமெல் லாமுட னேகடை யற்கவர்ந்த
    நெய்வா யயினெடு மாறன் பகைபோல் நினைந்துபண்டை
    ஒவ்வா வுருவம் ஒழியுமென் னோவள்ள லுள்ளியதே
.’       (24)


                     
 உற்றதுரைத்தல்


     இவ்வகை பாங்கன் வினாவானாயின் தலைமகற்கு உற்றது கடைப்பிடியாது விட்டானாம். இவ்வகை கடைப்பிடித்து வினவிய பாங்கற்கு, ‘நெருநல் இவ்வகையார் ஒருவரைக் கண்டேற்கு என் உள்ளம் பள்ளத்துவழி வெள்ளம்போல ஓடி, இவ்வகைத்து ஆயிற்று’ என்று சொல்லும்; அதற்குச் செய்யுள்:


  
 ‘அளையா ரரவின் குருளை யணங்க அறிவழிந்து
    துளையார் நெடுங்கைக் களிறு நடுங்கித் துயர்வதுபோல்
    வளையார் முளையெயிற் றார்மன்னன் மாறன்வண் கூடலன்ன
    இளையா ரொருவ ரணங்கநைந் தாம்மெய் இளைக்கின்றதே’  (25)


    ‘அலையார் கழல்மன்ன ராற்றுக் குடியழ லேறச்செற்ற
    கொலையா ரயிற்படைக் கொற்றவன் கூடலன் னாரொருவர்
    முலையாய் முகிழ்த்துமென் தோளாய்ப் பணைத்து முகத்தனங்கன்
    சிலையாய்க் குனித்துக் குழலாய்ச் சுழன்றதென் சிந்தனையே’ (26)


    ‘பொருநெடுந் தானைப்புல் லார்தம்மைப் பூலந்தைப் பூவழித்த
    பருநெடுந் திண்தோட் பராங்குசன் கொல்லிப் பனிவரைவாய்த்
    திருநெடும் பாவை அனையவள் செந்தா மரைமுகத்துக்
    கருநெடுங் கண்கண்டு மீண்டின்று சென்றதென் காதன்மையே’