இறையனார் அகப்பொருள் - களவு 53
 

   ‘கடித்தடம் விண்ட கமல முகங்கம லத்தரும்பே
   பொடித்தடங் காமுலை பூலந்தைத் தெம்மன்னர் பூஅழிய
   இடித்தடங் காவுரு மேந்திய கோன்கொல்லி யீர்ம்பொழில்வாய்   
   வடித்தடங் கண்மல ராலென்னை வாட்டிய வாணுதற்கே.
’       (37)

   ‘நிணங்கொள் புலாலுணங்க னின்றுபுள் ளோப்புதல் தலைக்கீடாகக்
   கணங்கொள்வண் டார்த்துலாங் கன்னி நறுஞாழல் 1கையிலேந்தி
   மணங்கமழ் பூங்கானல் மன்னிமற் றாண்டோர்
   அணங்குறையும் என்பதறியேன் அறிவனேல் அடையேன்மன்னோ
.’ 
                                    (சிலப்பதிகாரம், கானல்வரி- 9)

      இவ்வாறு உணர்த்தப்பட்ட பாங்கன், நீ இனையையாகல்;
என்னின்ஆவது உண்டேற் காண்பல்’ என்று தலைமகனை ஆற்று வித்து,
அவன்சொன்ன இடம் நோக்கிச் செல்வானாவது. இது தலைமகன் நிலைமை

      இனித், தலைமகளது நிலைமை: பிற்றைஞான்று தன் ஆய
வெள்ளத்தோடும் வந்து, தான் விளையாடும் இடம் புகுதலுடையாள்,
நெருநலைநாளால், ‘‘நின்னிற் பிரியேன் பிரியின் ஆற்றேன்’’ என்று
சொல்லினான் ஆயத்துள்ளே வருவான் கொல்லோ! என்னும்பெருநாணினானும்,
‘ஆற்றாமையான் இறந்துபட்டான் கொல்லோ!’ என்னும் அச்சத்தினானும்
மீதூரப்பட்டுத் தன் தன்மையளன்றித் தன் ஆய வெள்ளம் புடைபெயருமாறு
புடைபெயர்ந்து வருகின்றார், நெருநலை நாளால் தலைமகனை வழிபட்ட இடம்
எதிர்ப்பட்டுத், தலைமகனைக் கண்டாளே போல் நின்றாள். என்னை,
இனியாரொடு தலைப்பெய்த இடம் காண்டலும் அவ்வினியாரைக் கண்டாலே
போல்வது உலகத்துத் தன்மை அவ்வாறு நிற்ப, ஆயங்களும் நெருநலைநாளாற்
பிரிந்தாற்போலத், தழை விழைதக்கன தொடுத்தும் என்றும், கண்ணி தண்ணறு
நாற்றத்தன செய்தும் என்றும், போதுமேதக்கன கொய்தும் என்றும், இவ்வாறு
விளையாட்டு விருப்பினாற் பிரியும். பிரியநின்றாள், எப்பெற்றி நின்றாளோ
எனின், ஆயத்துள்ளே வருவான் கொல்லோ என்னும் நாண் நீங்கிற்று;
என்னை, ஆயங்கள் நீங்கினமையான். இனி, இறந்துபட்டான் கொல்லோ
என்னும் அச்சத்தினான் மீதூரப்பட்டு நின்றாள், நின்ற நிலைமைக்கண்
பாங்கன் சென்று, அவள் தன்னைக் காணாமைத், தான் அவளைக்
காண்பதோர் அண்மைக்கண் காணும். கண்டு, ‘இவ்விடமே அவனாற்
காணப்பட்ட இடமும், இவ்வுருவே அவனாற் காணப்பட்ட உருவும்’ எனத்
துணியும். அதற்குச் செய்யுள்:

   
 (பாடம்) 1. கையில் ஊன்றி.