இறையனார் அகப்பொருள் - களவு 55
 

                       கண்டமை கூறல்

       ‘இரவோ ரன்ன கொழுநிழல் தாஅய்
       நிலவோ ரன்ன வெண்மண லொழுகி
       வண்டுந் தேனும் வரிக்கடைப் பிரசமுங்
       கொண்டு புணர்நரம் பென்று முரன்று
       விழைவு விடுத்த விழுமி யோரையும்
       விழைவு தோற்று விக்கும் பண்பிற்று


   ‘மின்னே ரொளிமுத்த வெண்மணல் மேல்விரை நாறுபுன்னைப்
   பொன்னேர் புதுமலர் தாய்ப்பொறி வண்டு முரன்றுபுல்லா
   மன்னே ரழிய மணற்றிவென் றான்கன்னி வார்துறைவாய்த் 
   தன்னேர் இலாத தகைத்தின்றி யான்கண்ட தாற்பொழிலே
’   (42)

   ‘களிமன்னு வண்டுளர் கைதை வளாய்க்கண்டல் விண்டுதண்டேன்
   துளிமன்னு வெண்மணற் பாயினி தேசுட ரோன்மருமான்
   அளிமன்னு செங்கோல்1 அதிரியன் ஆற்றுக் குடியுள்வென்ற
   ஒளிமன்னு முத்தக் குடைமன்னன் கன்னி உயர்பொழிலே
.’   (43)

   ‘தேனுறை பூங்கண்ணிச் சேரலர் சேவூர் அழியச்செற்ற
   ஊனுறை வைவேல் உசிதன்றன் வையை உயர்மணல்மேல்
   கானுறை புன்னைப்பொன் னேர்மலர் சிந்திக் கடிகமழ்ந்து
   வானுறை தேவரு மேவும் படித்தங்கொர் வார்பொழிலே
.’    (44)


                
மொழிபெற வருந்தல்
 

        என்று சொல்லி, ‘நீயாகாதே இவ்வகை மேதக்கன எய்தற் பாலாய்’
எனத், தலைமகனும் அவ்விடம் நோக்கிச் செல்லும், சென்றவிடத்துத்
தனியளாய் நின்ற தலைமகளை எதிர்ப்படும், எதிர்ப்படவே, தலைமகள்
காணும். காணவே, ஆற்றாமையான் இறந்துபட்டான்கொல்லோ என்னும்
அச்சம் நீங்கும், நீங்கத் தன் தன்மையள் ஆயினாள். தன்றன்மை என்பது
நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் இவற்றொடுங் கூடி நிற்பது
அத்தன்மையளாய் நிற்பத், தலைமகளது குறிப்பின்றிச் சாரலாகாமையின்
ஆற்றானாயினான் தலைமகன். ஆற்றாமை என்பது பிறிது எவ்வுணர்வும்
இன்றி அவ்வாற்றாமை தானே ஆவது. அவ்வாற்றாமை ஆற்றுவது
ஒன்றனைப் பற்றும். ஆற்றுவது பிறிது இன்மையின் ஒருசொற் சொல்லும்.
என்சொல்லுமோ எனின், ‘நின்னை யான் இப்பொழிலுறு தெய்வம் என
ஐயுறுவல், அல்லையாயின் வாய் திறவாய், ஆவி சென்றால் பெயர்ப்பது
அரிதன்றோ’ என்று இவ்வகைபோல்வன சொல்லும்; அதற்குச் செய்யுள்:


   
 (பாடம்) 1. லதிகைய.