58இறையனார் அகப்பொருள்

   தேர்மன்னு தானை பரப்பித்தென் சேயூர்ச் செருமலைந்த
   போர்மன்னர் தம்மைப் புறங்கண்டு நாணிய பூங்கழற்கால்
   ஆர்மன்னு வேலரி கேசரி அந்தண் புகாரனைய
   ஏர்மன்னு கோதையைப்போலினி தாயிற்றிவ் வீர்ம்பொழிலே
’ (52)

என்று, முன் பாங்கற் கூட்டத்துச் சொன்னவாறே நின்ற தலைமகளை
ஆங்குச் சொன்னவாறே சென்று தலைமகன் புணர்வது, இது பாங்கிலன்
தமியோள் இடந்தலைப்படுமாறு.

      பாங்கற் கூட்டம் நிகழின், இடந்தலைப்பாடு நிகழாது;
இடந்தலைப்பாடு நிகழின், பாங்கற் கூட்டம் நிகழாது; என்னை, அத்துணை
எளியள் அல்லள் ஆகலான். அஃதே யெனின் ‘பாங்கிலன் தமியோள்
இடந்தலைப்படலும் பாங்கனோரிற் குறிதலைப்பெய்தலும்’ என்று எழற்பாற்று
இச் சூத்திரம்; என்னை, இடந்தலைப்பாடு தெய்வப்புணர்ச்சியோடு ஒக்கும்
ஆகலான்; அஃதே, அங்ஙனம் சொன்னானேயெனினும் மொழிமாற்றிக்
கொள்க என்பது; அது பொருந்தாது. மொழிமாற்றுதல் என்பது, செய்யுள்
கிடந்தவாறு செய்யலாகாதவழிச் செய்வது. அவ்வாறு செய்யுஞ் சூத்திரம்
இனியதாய்க் கிடப்ப மொழிமாற்றுச் சூத்திரமாகச் செய்யல் வேண்டுமோ
என்றாற்குப் பெரும்பான்மையும் பாங்கனான் ஆம் என்பது சிந்திக்கும்;
சிறுபான்மை விதியினான் ஆம் என்பது சிந்திக்கும். ஆகலான், அவன்
சிந்தித்தவாற்றானே சூத்திரஞ் செய்யப்பட்டது; மொழி மாற்றுச் சூத்திரம்
அன்று என்பது உலகத்தோர் இடுக்கணுற்றால் விதியானே தீரும் என்று
இரார். முன்னம் தீர்த்தற்குச் சுற்றத்தாரையும் நட்டாரையும் நினைப்பர்;
ஆகலானும் அவ்வாறே சொல்லப்பட்டது. அஃதேயெனின், புறத்து யாரானும்
உணர்ந்தார் உளர் என்பது உணர்ந்த ஞான்று இவள் இறந்துபடும் என்னும்
கருத்துடையான், பிற்றைஞான்றே சென்று பாங்கற்கு உணர்த்தற்பாலனோ
எனின், குற்றம் குணம் என்பது தெருளாது உணர்த்தும் என்னும் ஒருவன்.
அது பொருந்தாது; அங்ஙனம் தெருளாது உணர்த்தின் பாங்கற்கே
உணர்த்தக்கடவனோ வழிப்போவார்க்கு உணர்த்த அமையாதோ என்பது.
மற்றென்னோ எனின், தான் உணர்ந்தானன்றே இவ்வொழுக்கத்தினை! தான்
உணர்ந்ததனோடு ஒதுக்குமன்றே இவன் உணர்ந்தது! அவனைத் தன்னின்
வேறல்லன் என்று கருதினமையான் அமையும்.

     இனிப் பாங்கனாற் குறிதலைப்பெய்தலும் என்று ஒருமைப்படச்
சூத்திரஞ் செய்யாது, ‘பாங்கனோரின்’ என்று பன்மைப் படக் கூறியது
எற்றிற்கு, அவன் ஒருவனல்லனோ எனின்,