68இறையனார் அகப்பொருள்

வேறுபாடு தெய்வத்தினான் ஆற்றுக்கொல்லோ’ எனவும், ‘மக்களினான்
ஆயிற்றுக்கொல்லோ’ எனவும், இனி ‘அவன் அதற்கொண்டு தழையும்
கண்ணியும் கொண்டு பின்னிலை முனியாது இரந்து பின்னிற்கின்றான்,
இவனுடைய குறை யார்மாட்டது கொல்லோ’ எனவும் எனக் கொள்க.
அங்ஙனம் கவர்ந்த தோழி, ‘இவள் வேறுபட்டது இவன் காரணம்போலும்,
இவன் இரந்து பின்னிற்கின்றது இவள் காரணம்போலும்’ என ஒருங்கு
கண்ணிவேறாக வகுத்துணரும் என்பது. அதற்குச் செய்யுள்:

              
இருவர்நினைவும் ஒருவழியுணர்தல்

 
 ‘விரையா டியகண்ணி வேந்தன் விசாரிதன் சொல்லிவிண்தோய்
   வரையா டியபுனங் காவலும் மானின் வழிவரவும்
   நிரையா டியகுழ லாட்கும் இவற்கும் நினைப்பினில்லை
   உரையா டுவர்கண்ணி னானுள்ளத் துள்ளதும் ஒன்றுளதே
’    (64)

   ‘
பொருங்கண்ணி சூடிவந் தார்படப் பூலந்தைப் பொன்முடிமேல்
   இருங்கண்ணி வாகை அணிந்தான் பொதியில் இரும்பொழில்வாய்
   மருங்கண்ணி வந்த சிலம்பன்தன் கண்ணும்இவ் வாள்நுதலாள்
   கருங்கண்ணுந் தம்மிற் கலந்ததுண்டாம்இங்கொர் காரணமே
’  (65)

      என, இத் தொடக்கத்தன கொள்க. அஃதே யெனின், ‘இரந்து
குறையுறாது கிழவியும் தோழியும் தலைப்பெய்த செவ்வி நோக்கி’ என
அமையாதோ? ‘ஒருங்கு’ என வேண்டியது என்னை? களவுகாலத்துத்
தலைமகன் தேரொடும் ஒருங்கு செல்ல அமையும் என்றற்கு வைத்தார்.
என்னை? சான்றோர் செய்யுள் அங்ஙனம் வந்ததாகலின். அது வருமாறு;

      
 ‘நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்தேர்
        ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடலோதம்
        ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற் றெம்மொடு
        தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடலோதம்
.’
                                (சிலப்பதிகாரம்-கானல்வரி: 39)

என்று இத் தொடக்கத்தன கொள்க.

      ‘மதியுடம் படுத்தற்கும் உரியன்’ என்ற உம்மை யாதோ எனின்,
வரைந்து எய்துதல் மிக்கதே என்பது போதர ஆங்ஙனம் உரைத்தார். (6)

                      
சூத்திரம்-7

         முன்னுற உணர்தல் குறையுற உணர்தல்
        இருவரும் உள்வழி அவன்வர வுணர்தலென்று
        அம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி.