இறையனார் அகப்பொருள் - களவு 7
 

யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, ‘பொருளதிகாரம்
வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்’ என்று வந்தார். வர அரசனும் புடைபடக்
கவன்று ‘என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது
1பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமேயெனின்,
இவை பெற்றும் பெற்றிலேம்’ எனச் சொல்லாநிற்ப, மதுரை ஆலவாயில் அழல்
நிறக்கடவுள் சிந்திப்பான்: ‘என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று;
அதுதானும் ஞானத்திடைய தாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்’ என்று,
இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின்
கீழிட்டான்.

      இட்ட பிற்றைஞான்று, தேவர்குலம் வழிபடுவான், தேவர் கோட்டத்தை
எங்குந் துடைத்து, நீர் தெளித்துப் பூவிட்டுப் பீடத்தின்கீழ் என்றும்
அலகிடாதான் அன்று 2தெய்வதத்துக் குறிப்பினான், ‘அலகிடுவென்’ என்று,
உள்ளங்குளிர அலகிட்டான்; இட்டாற்கு அவ்வலகினோடும் இதழ் போந்தன.
போதரக், கொண்டுபோந்து நோக்கினாற்கு வாய்ப்புடைத்தாயிற்றோர்
பொருளதிகாரமாய்க் காட்டிற்று. காட்டப், பிரமன் சிந்திப்பான்: ‘அரசன்
பொருளதிகாரம் இன்மையிற் கவல்கின்றான் என்பது கேட்டுச் செல்லாநின்றது
உணர்ந்து நம்பெருமான் அருளிச் செய்தானாகும்’ என்று தன் அகம்
புகுதாதே, கோயிற் றலைக்கடைச் சென்று நின்று, கடைகாப்பார்க்கு உணர்த்தக்,
கடைகாப்பார் அரசற்கு உணர்த்த, அரசன், ‘புகுதுக’ எனப் பிரமனைக்
கூவச், சென்று புக்குக் காட்ட ஏற்றுக்கொண்டு நோக்கிப், ‘பொருளதிகாரம்!
இது நம்பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தானாகற்பாலது!’
என்று, அத்திசை நோக்கித் தொழுதுகொண்டு நின்று, சங்கத்தாரைக் கூவுவித்து
‘நம்பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச்செய்த பொருளதிகாரம்,
இதனைக் கொண்டுபோய்ப் பொருள் காண்மின்’ என அவர்கள் அதனைக்
கொண்டுபோய்க் கல்மாப்பலகை ஏறியிருந்து ஆராய்வுழி, எல்லாரும் தாந்தாம்
உரைத்த உரையே நல்லதென்று சில நாளெல்லாஞ் சென்றன

                    களவியல் உரை கண்டமை

     செல்ல, ‘நாம் இங்ஙனம் எத்துணை உரைப்பினும் ஒருதலைப்படாது;
நாம் அரசனுழைச் சென்று, நமக்கோர் காரணிகனைத் தரல்வேண்டும் என்று
கொண்டுபோந்து, அவனாற் பொருளெனப்பட்டது பொருளாய்,
அன்றெனப்பட்டது அன்றாய் ஒழியக்

(பாடம்) 1. பொருளாய்வின். 2. தெய்வத்தவக்.