சிறப்புப்பாயிரம்11

பாண்டியன்       மாகீர்த்தி      இருபத்துநாலாயிரம்     யாண்டு
வீற்றிருந்தானாதலின்   அவனும்,  அவன்   அவையிலுள்ளோரும்  அறிவு
மிக்கிருத்தலின்   அவர்கள்  கேட்டிருப்ப  அதங்கோட்டாசிரியர்  கூறிய
கடாவிற்கெல்லாங் குற்றந்தீர விடைகூறுதலின் 'அரிறப' என்றார்.
 

அகத்தியனார்  அதங்கோட்டாசிரியரை  நோக்கி  'நீ  தொல்காப்பியன்
செய்த  நூலைக்  கேளற்க'  வென்று  கூறுதலானும்  தொல்காப்பியனாரும்
பல்காலுஞ்சென்று 'யான்  செய்த  நூலை  நீர் கேட்டல் வேண்டும்' என்று
கூறுதலானும்,  இவ்விருவரும்    வெகுளாமல்   இந்   நூற்குக்   குற்றங்
கூறிவிடுவதெனக்  கருதி  அவர் கூறிய கடாவிற்கெல்லாம் விடைகூறுதலின்
'அரிறபத் தெரிந்து' என்றார்.
 

அவர்    கேளன்மி    னென்றதற்குக்    காரண   மென்னையெனின்,
தேவரெல்லாருங்கூடி யாஞ் சேரவிருத்தலின்  மேருத்  தாழ்ந்து  தென்றிசை
உயர்ந்தது;  இதற்கு   அகத்தியனாரே  ஆண்டிருத்தற்குரியரென்று அவரை
வேண்டிக்கொள்ள,         அவருந்       தென்றிசைக்கட்போதுகின்றவர்
கங்கையாருழைச்சென்று   காவிரியாரை   வாங்கிக்   கொண்டு,   பின்னர்
யமதக்கினியாருழைச்சென்று   அவர்    மகனார்   திரணதூமாக்கினியாரை
வாங்கிக்கொண்டு,  புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார்
உலோபா   முத்திரையாரை  அவர்  கொடுப்ப நீரேற்று இரீஇப், பெயர்ந்து,
துவராபதிப்போந்து    நிலங்கடந்த   நெடுமுடியண்ணல்வழிக்கண்  அரசர்
பதினெண்மரையும்       பதினெண்கோடி       வேளிருள்ளிட்டாரையும்
அருவாளரையுங்    கொண்டு    போந்து,    காடுகெடுத்து    நாடாக்கிப்
பொதியின்கணிருந்து, இராவணனைக்  கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை
ஆண்டு       இயங்காமை     விலக்கித்      திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி, 'நீ  சென்று  குமரியாரைக்  கொண்டு வருக'
வெனக்   கூற,  அவரும்   எம்   பெருமாட்டியை   எங்ஙனங்  கொண்டு
வருவலென்றார்க்கு  'முன்னாகப்  பின்னாக  நாற்கோல்நீளம் அகல நின்று
கொண்டுவருக'  வென   அவனும்   அங்ஙனம் கொண்டுவருவழி, வையை
நீர்கடுகிக்   குமரியாரை  ஈர்த்துக்   கொண்டு   போக, தொல்காப்பியனார்
கட்டளை  யிறந்துசென்று  ஓர்  வெதிர்ங்கோலை முறித்து நீட்ட, அதுபற்றி
யேறினார் ;    அது     குற்றமென்று    அகத்தியனார்   குமரியாரையுந்
தொல்காப்பியனாரையுஞ்  'சுவர்க்கம் புகாப்பிர்' எனச் சபித்தார் ; 'யாங்கள்
ஒரு  குற்றமுஞ் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெருமானுஞ்
சுவர்க்கம்  புகாப்பிர்'  என அவர்  அகத்தியனாரைச் சபித்தார். அதனான்
அவர் வெகுண்டாராதலின் அவன் செய்த நூலைக் கேளற்க வென்றாரென்க.
 

நான்கு  கூறுமாய்  மறைந்த  பொருளும்  உடைமையான்  'நான்மறை'
யென்றார்.    அவை  தைத்திரியமும்  பௌடிகமுந்    தலவகாரமுஞ்
சாமவேதமுமாம்.
இனி   இருக்கும்  யசுவும்  சாமமும்   அதர்வணமு
மென்பாரு முளர். அது பொருந்தாது ; இவர் இந்நூல் செய்த